/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உங்களிடமுள்ள ஆற்றலுடன் முன்னேறுங்கள்
/
உங்களிடமுள்ள ஆற்றலுடன் முன்னேறுங்கள்
ADDED : செப் 27, 2025 12:04 AM

திருப்பூர்; ''உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றலை கண்டறிந்து விடாமுயற்சியுடன் மனத்தடைகளை அகற்றி முன்னேறுங்கள்,'' என்று மாணவர்களுக்கு எழுத் தாளர் திருப்பூர் கிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில், 53வது பட்டமேற்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:
ஒருவருடைய வளர்ச்சிக்கும் சாதனைக்கும் உடல் குறைபாடு தடையில்லை. இதற்கு சான்று ஹெலன் கெல்லர். ஒரு மனிதன் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு அடிப்படை அவனது மனமே. வென்றவரைப் பார்த்து தோல்வியுற்றவர் கூறும் காரணம் ஏற்கவியலாது. மனத்தடைகளை அகற்றி முயற்சி யுடன் முன்னேற வேண்டும் என்ற ஒற்றை எண்ணத்தில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். நான் முன்னேற வேண்டுமென்ற நல்ல சுயநலம் இருக்க வேண்டும்.
பிறரின் விமர்சனத்தால் துவண்டு விடக்கூடாது. அவைதான் முன்னேற்ற பாதையில் அடி எடுத்து வைக்க உதவும் சக்தி. மாணவர்களுடைய வளர்ச்சி கண்டு மகிழ்ந்து பெருமைப்படும் ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும்.
ஆசிரியரின் வழிகாட்டல் நம்மை உயர்த்தும், நான் உயரிய நிலை அடைந்ததற்குக் காரணம் என்னுடைய ஆசிரியர்களே என்று உறுதியாக நம்புகிறேன். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றலை கண்டறிந்து விடாமுயற்சியுடன் மனத்தடைகளை அகற்றி வாழ்வில் முன்னேற்றம் காணுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாரதியார் பல்கலை தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற, 21 மாணவர் களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, 578 இளநிலை மாணவர்கள், 204 முதுநிலை மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
பேராசிரியர்கள் நற்பசலை அரசு, கனகராஜ், ராஜாராம், மோகன்குமார், ராஜேஷ், விஜயகீதா, விநாயகமூர்த்தி, அமிர்தராணி, விஜயன், நசிரா ஆகியோர் பட்டமேற்பு விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.