/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம சபாவில் 'சுருங்கிய' தீர்மானங்கள்
/
கிராம சபாவில் 'சுருங்கிய' தீர்மானங்கள்
ADDED : ஏப் 26, 2025 11:35 PM
திருப்பூர்: ஊரக உள்ளாட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், அந்தந்த ஒன்றிய உதவி பி.டி.ஓ.,க்கள் மற்றும் பி.டி.ஓ.,க்களின் முழு அதிகார வரம்புக்கு உட்பட்டு, கிராம ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை, அந்தந்த ஊராட்சி தலைவர்களும், செயலர்களும் தான், முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர்களாக இருந்து வருகின்றனர்.
அவர்களது ஏற்பாட்டின்படி நடக்கும் கிராம சபா கூட்டங்களில், தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் என்ற அடையாளத்துடன் பலரும் பங்கேற்பர். அவரவர் பகுதிகளில் நிலவும் பிரச்னைகளை பட்டியலிடுவர்.
குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் நடக்கும் வாக்குவாதத்தில் அனல் தெறிக்கும். இந்நிலையில், தற் போது தலைவர்கள், உறுப்பினர்கள் அல்லாத, அதிகாரிகளின் அதிகாரத்துக்குட்பட்டு கிராம சபா கூடுகிறது.
பொதுவாக, அந்தந்த ஊராட்சி வரவு, செலவு கணக்கு துவங்கி, மத்திய, மாநில அரசுகளின் ஒவ்வொரு திட்டத்தையும் சுட்டிக்காட்டி, அவற்றின் செயல்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டும் என்ற தீர்மானங்கள் முன்மொழியப்பட்டிருக்கும்.
பாலித்தின் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட அரசின் பொதுவான திட்டங்களை செயல்படுத்துவது குறித்த வழிகாட்டுதலும் இருக்கும். அதிக பக்கங்களை உள்ளடக்கிய தீர்மான பட்டியல், இந்த முறை சுருங்கியிருக்கிறது.
ஊராட்சிகளின் வரவு - செலவு அறிக்கை, கட்டட அனுமதி வழங்குவது, வரி வசூலில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் மட்டுமே முன்மொழியப்பட்டிருக்கிறது.

