/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடராஜா தியேட்டர் ரோடு தரைப்பாலம் இன்று திறப்பு! சுரங்கப்பாலம் கட்டுவது வேகமெடுக்கும்
/
நடராஜா தியேட்டர் ரோடு தரைப்பாலம் இன்று திறப்பு! சுரங்கப்பாலம் கட்டுவது வேகமெடுக்கும்
நடராஜா தியேட்டர் ரோடு தரைப்பாலம் இன்று திறப்பு! சுரங்கப்பாலம் கட்டுவது வேகமெடுக்கும்
நடராஜா தியேட்டர் ரோடு தரைப்பாலம் இன்று திறப்பு! சுரங்கப்பாலம் கட்டுவது வேகமெடுக்கும்
ADDED : நவ 04, 2025 12:02 AM

திருப்பூர்:  சுரங்க பாலம் கட்டும் பணியில், போக்குவரத்து மாற்றம் செய்யும் திட்டத்துக்காக, நடராஜா தியேட்டர் ரோடு பாலம் இன்று திறக்கப்படுகிறது.
திருப்பூரின் மையப்பகுதியான நொய்யல் ஆற்றின் வடபுறக்கரையில், குமரன் ரோட்டின் குறுக்கில், எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் அருகே, சுரங்க பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக, குமரன் ரோட்டிலிருந்து தெற்கு நோக்கி வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விட வேண்டியுள்ளது.
அவ்வகையில், சோதனை அடிப்படையில் கடந்த 1ம் தேதி, போக்குவரத்து போலீசார் சில மாற்றங்களை நடைமுறைப்படுத்தினர். இதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், அன்று மாலையே இந்த மாற்றத்தை போலீசார் கைவிட்டனர்.
இந்நிலையில், இப்பிரச்னையில் முதல் தீர்வாக எதிர்பார்க்கப்படும் நடராஜா தியேட்டர் பகுதி நொய்யல் புதிய பாலம் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலை கலெக்டர் மனிஷ் நாரணவரே, மாநகராட்சி கமிஷனர் அமித் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். இன்று அமைச்சர் சாமிநாதன் பாலத்தை திறந்து வைக்கிறார். அதன்பின், பாலத்தில் வாகனப்போக்குவரத்து அனுமதிக்கப்படும். அதற்கேற்ப போக்குவரத்து மாற்றங்கள் குறித்து போலீசார் அறிவிப்பு வெளியிடுவர்.
சுரங்கப்பாலம் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொண்டுள்ள சுரங்கப்பாலம் கட்டுமானப் பணி பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தது. இது குறித்த கோர்ட் வழக்குகள், இழப்பீடு பிரச்னைகள் உள்ளிட்டவை எல்லாம் முடிவுக்கு வந்து கடந்தாண்டு இப்பணி துவங்கியது. பார்க் ரோடு மற்றும் யுனிவர்சல் சந்திப்பு ரோட்டில் சுரங்கபாதை அமைக்கப்பட்ட நிலையில், பிரதான ரோட்டில் கீழ் பணி துவங்கும் கட்டத்தில் தற்போது உள்ளது. இதற்காக வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதற்காக, மீண்டும் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது வெற்றி பெற்ற பின், வாகனப் போக்குவரத்து முழுமையாக மாற்றம் செய்யப்பட்டதும், சுரங்கப்பால பணிகள் துவங்கும். நான்கு மாத காலத்துக்குள் பணியை செய்து முடிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளதாக, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் செய்தி
எதிரொலி
நொய்யல் ஆற்றின் கரையில் தெற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரோட்டில், மையத்தில் மின் கம்பம் உள்ளது. உயர் அழுத்த மின் கம்பிகள் இதன் மீது கடந்து செல்கின்றன. போலீசார் திட்டமிட்டபடி வானகங்கள் இவ்வழியாக திருப்பி விடும் போது, இந்த மின் கம்பம் பெரும் இடையூறாக இருக்கும். இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானாது. இதனால், மின் கம்பம் இடமாற்றம் செய்யப்பட்டது.

