/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைதீர் கூட்டத்தில் மனுக்கள்: தீர்வைத்தேடும் மக்கள்!
/
குறைதீர் கூட்டத்தில் மனுக்கள்: தீர்வைத்தேடும் மக்கள்!
குறைதீர் கூட்டத்தில் மனுக்கள்: தீர்வைத்தேடும் மக்கள்!
குறைதீர் கூட்டத்தில் மனுக்கள்: தீர்வைத்தேடும் மக்கள்!
ADDED : நவ 04, 2025 12:03 AM

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) புஷ்பாதேவி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவத்சலம் ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். அம்மனுக்கள், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, துறை சார்ந்த அரசு அலுவலர்களிடம் சேர்க்கப்பட்டன.
பாதை வசதி தேவை
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஊத்துக்குளி தாலுகா குழு தலைவர் மணியன்:
ரெட்டிபாளையம் கிராமத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், கடந்த 1995ல், 380 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அப்பகுதியில் தற்போது, 200 குடும்பங்கள்
வசித்துவருகின்றனர். முறையான பாதை வசதி இல்லை. ஊத்துக்குளி - சென்னிமலை ரோட்டிலுள்ள வண்டிப்பாதை புறம்போக்கை, உடனடியாக தார்சாலையாக மாற்றித்தரவேண்டும். அம்பேத்கர் நகர் மக்களுக்கு மயான வசதிக்கு உரிய இடம் ஒதுக்கி, சுற்றுச்சுவர் கட்டித்தரவேண்டும். அங்கன்வாடி மையம் கட்டப்பட வேண்டும்.
விஜயமங்கலம் ரோடு, நுகர்பொருள் வாணிப கழக குடோன் முதல் ரயில்வே லைன் வரை, தெருவிளக்கு வசதி செய்துதர வேண்டும்.
பட்டாவுக்காக வசூல்
--------------------
ஏ.ஐ.சி.சி.டி.யு., நிர்வாகிகள்:
ஊத்துக்குளி தாலுகா, ரெட்டிபாளையம், தளவாய்பாளையம், கஸ்துாரிபாளையம், சென்னிமலைபாளையம் கிராம மக்கள், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனர். வீடு வீடாக சென்று, முன்னுரிமை பட்டியலில் இருப்பதாக கூறி, 20 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்த நபர் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊத்துக்குளி பேரூராட்சியில், துாய்மை பணியாளர் சேகரித்துவரும் அட்டை பெட்டி, இரும்பு, பிளாஸ்டிக் கழிவுகளை, பேரூராட்சி நிர்வாகம், விற்பனை செய்கிறது; இதனால், துாய்மை பணியாளர்களுக்கு எவ்வித பயனும் கிடைப்பதில்லை. தொழில்வரி, வீடு கட்டுவது என அனுமதிகள் வழங்குவதற்கு, லஞ்சம் வாங்குகின்றனர்.
குற்றம் தடுக்க வழி
---------------
ஹிந்து இறை தொண்டர்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை:
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்களிடையே ஒழுக்கமின்மை காரணமாக, போதை பழக்கம், சட்டத்தை மதிக்காதது, பாலியல் குறறங்கள், திருட்டு, கோஷ்டி மோதல் போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இளம் வயதிலேயே குற்ற செயல்களில் ஈடுபடுவோர், தங்கள் வாழ்க்கையையே இழக்கின்றனர்; இவர்களால் சமூகத்துக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு கல்வியோடு சேர்த்து, நல் ஒழுக்கங்களையும் கற்றுக்கொடுக்க உத்தரவிடவேண்டும். தனி மனித ஒழுக்கம் உருவானால் மட்டுமே, குற்றங்களை தடுக்க முடியும்.
விஷ ஜந்து நடமாட்டம்--------------------
வெற்றி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், 'குடிமங்கலம் ஒன்றியம், அணிக்கடவு ஊராட்சி, ராமச்சந்திராபுரத்தில், ஸ்ரீ அழகர் பெருமாள் கோவிலுக்கு பின்னுள்ள பகுதிகளில், தெருவிளக்குகள் எரிவதில்லை. இரவு நேரங்களில், பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களால், மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. உடனடியாக தெருவிளக்கு வசதி செய்து கொடுக்கவேண்டும்,' என்று கூறியுள்ளனர்.
* செங்கப்பள்ளி கிராமத்தில், தாலுகா அலுவலகத்துக்கு பின்புறம், க.ச.எண்: 481ல், மாற்றுத்திறனாளிகள் 96 பேருக்கு, கடந்த ஆக. 11ல் பட்டா வழங்கப்பட்டது. அப்பகுதி மேடும் பள்ளமுமாக உள்ளது. நிலத்தை சமன் செய்து, அளவீடு செய்து தரவேண்டும்.

