ADDED : டிச 16, 2024 12:28 AM

புவனேஸ்வரில் நடந்த தேசிய தடகள போட்டியில் முதலிடம் பெற்று, தங்கம் வென்றவர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய தடகள சங்கம் சார்பில், ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் இம்மாதம், 7ல் துவங்கி, 11ம் தேதி வரை, ஐந்து நாட்கள், 39வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தமிழக அணி சார்பில், திருப்பூரில் இருந்து பங்கேற்ற மாணவி ஸ்ரீ வர்த்தினி, 20 வயதுக்கு உட்பட்டோர், 400 மீ., தடை தாண்டும் ஓட்டம் மற்றும் 1,600 மீ., தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றார்.
இம்மாணவியை உடற்கல்வி ஆசிரியர் அழகேசன் மற்றும் மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் பாராட்டினர். அவிநாசியை சேர்ந்தவர் மனோஜ்குமார்; அவிநாசி அரசு கல்லுாரி பட்டப்படிப்பு படித்து வருகிறார். தேசிய தடகள போட்டியில் பங்கேற்ற மனோஜ் குமார். 'டெகத்லான்' போட்டியில் முதலிடம் பெற்று, தங்கம் வென்றார். திருப்பூர் வீராங்கனை தியா சஞ்சு, 16 வயது பிரிவு, குண்டு எறிதலில் பங்கேற்று, வெண்கலம் வென்றார்.
தமிழக அணியில் இடம் பெற்றதுடன், தேசிய போட்டியில் அசத்தலாக விளையாடி, தங்கம், வெண்கலம் வென்றவர்களுக்கு, மாவட்ட தடகள அசோசி யேஷன் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.