/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய வாக்காளர் தினம் மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு
/
தேசிய வாக்காளர் தினம் மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு
தேசிய வாக்காளர் தினம் மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு
தேசிய வாக்காளர் தினம் மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு
ADDED : ஜன 26, 2025 03:32 AM

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில், 15வது தேசிய வாக்காளர் தினம், நேற்று கொண்டாடப்பட்டது.
கடந்த, 2011ம் ஆண்டு முதல், இந்திய தேர்தல் கமிஷன் துவங்கப்பட்ட (1950) ஜன., 25 ம் தேதி, தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 11 லட்சத்து, 82 ஆயிரத்து, 905 ஆண்கள்; 12 லட்சத்து, 32 ஆயிரத்து, 351 பெண்கள்; 352 திருநங்கைகள் என, 24 லட்சத்து, 15 ஆயிரத்து, 508 வாக்காளர்கள் உள்ளனர்.
கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். போலீஸ் எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக், மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் தலைமையில், 15வது தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. கல்லுாரி மாணவ, மாணவியர், வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர்.
வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவருக்கு, வினாடி வினா, சுவர் இதழ் வரைதல், தமிழ் மற்றும் ஆங்கில கட்டுரை போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பரிசும் பாராட்டுச்சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.
மகளிர் சுய நிதி கல்லுாரிகளுக்கு நடந்த ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றவர்கள், தேர்தல் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர் ஆகியோருக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய வாக்காளர் தினமான நேற்று, 18 வயது பூர்த்தியான இளம் வாக்காளருக்கு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மாவட்டத்தை சேர்ந்த மூத்த வாக்காளர்கள், பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
நிகழ்ச்சியில், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் தங்கவேல், திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன் உட்பட பேராசிரியர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

