/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாட்டுநலப்பணி திட்ட முகாம்; மாணவர்கள் களப்பணி
/
நாட்டுநலப்பணி திட்ட முகாம்; மாணவர்கள் களப்பணி
ADDED : செப் 30, 2024 11:13 PM

உடுமலை : உடுமலை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடந்து வருகிறது.
காலாண்டு விடுமுறையையொட்டி, உடுமலை சுற்றுவட்டார அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடக்கிறது.
பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியின் சார்பில், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடக்கிறது.
முதல் நிகழ்வாக உடுமலை பிரியா நர்சிங் இன்ஸ்டிடியூட் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் சடையபாளையம், அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பயன்பெற்றனர். தொடர்ந்து பள்ளியில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
* புங்கமுத்துார் காந்திகலா நிலையம் மேல்நிலைப்பள்ளியின் சார்பில், மொடக்குபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இம்முகாம் நடக்கிறது.
முகாமில் செயல்படுத்தப்படும் களப்பணிகள், மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து என்.எஸ்.எஸ்.,அலுவலர் அசோக்குமார் தெரிவித்தார்.
* குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழாவில், நாட்டுநலப்பணி திட்டம் குறித்தும், அதில் மாணவர்களின் பங்கு, முகாமில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், களப்பணிகள் குறித்து பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன் விளக்கமளித்தார்.
* உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியின் சார்பில், வி.ஜி.,ராவ் நகரில் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில் செயல்படுத்த உள்ள பணிகள் குறித்தும் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சேஷ நாராயணன் தெரிவித்தார்.
தொடர்ந்து நகராட்சி துவக்கப்பள்ளியில் மாணவர்கள் துாய்மைப்பணி செய்தனர். ராமசந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு சொற்பொழிவு நடந்தது.
* உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் சார்பில், நாட்டுநலப்பணி திட்ட முகாம் விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
துவக்க விழாவில், பள்ளி தலைமையாசிரியர்கள் விஜயா, திலகாம்பாள் தலைமை வகித்தனர். மாணவியருக்கு என்.எஸ்.எஸ்., முகாமின் செயல்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் விஜயலட்சுமி, சுமதி விளக்கினர்.
தீயணைப்பு விழிப்புணர்வு
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான தீயனைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை கோட்டத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளில் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.இதன் ஒரு பகுதியாக உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர் தலைமை வகித்தார். இதில் தீயணைப்புத்துறை அலுவலர்கள், முதலுதவி குறித்து விளக்கமளித்தனர். தொடர்ந்து மாணவர்கள் முன்னிலையில் தீ விபத்தில் சிக்கிக்கொள்பவர்களை காப்பாற்றுவது, எந்தெந்த முறைகளில் அவர்களை மீட்க வேண்டும், தீ விபத்தின்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கமளித்தனர்.
இந்நிகழ்ச்சியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புங்கமுத்துார் காந்திகலா நிலையம் மேல்நிலைப்பள்ளி, பூலாங்கிணர் மற்றும் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி என்.எஸ்.எஸ். அலுவலர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.