ADDED : நவ 17, 2025 01:33 AM

திருப்பூர்: ''நம் உடலுக்கு தன்னைத்தானே குணமாக்கும் சக்தி உள்ளது. அதற்கான நேரத்தை கொடுத்தால் மட்டும் போதும்'' என்று ஆரோக்கிய விழிப்புணர்வு முகாமில் கூறப்பட்டது.
திருப்பூர் இயற்கை நலச்சங்கம் சார்பில் கருவம்பாளையம் சன்மார்க்க சங்கத்தில் ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.
துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இணைச் செயலாளர் சித்ராதேவி, பொருளாளர் ரவி முன்னிலை வகித்தனர்.
'சர்க்கரை நோயி லிருந்து விடுதலை' தலைப்பில் கோவை இயற்கை நலச்சங்க செயலாளர் ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:
உணவு சமைக்காமல் சாப்பிடும்போது, அதில் உயிர், ஊட்டச்சத்து இருக்கும். அதிகளவு சாப்பிடாமல் அளவாக சாப்பிடுவோம்.
சர்க்கரை நோய்க்கு அதுவே சிறந்த மருந்து. வியர்வை வரும்படி உடலுக்கு அசைவு கொடுக்க வேண்டும். இரவு 7:00 மணிக்கு முன்பு சாப்பிட்டால் 10 மணிக்குள் செரிக்கும்.
பிறகு துாங்கினால் உடலில் மெலட்டோனின் ஹார்மோன் சுரந்து உடலை சீராக்கும்.
நம் உடலுக்கு தன்னைத்தானே குணமாக்கும் சக்தி உள்ளது. அதற்கான நேரத்தை கொடுத்தால் மட்டும் போதும். நம் உடலில் காற்று பல வேலைகளை செய்கிறது.
இரண்டு லிட்டர் வரை காற்றை உள்வாங்கும் திறன் கொண்டது நுரையீரல். அது நிரம்பும்படி நன்றாக காற்றை இழுத்து மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்.என்று பேசினார்.

