/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளறுபடிகளுடன் சிறப்பு முகாம்கள் ;முன்னறிவிப்பு இல்லை... அலுவலர்கள் மாயம்... வாக்காளர்கள் தவிப்பு
/
குளறுபடிகளுடன் சிறப்பு முகாம்கள் ;முன்னறிவிப்பு இல்லை... அலுவலர்கள் மாயம்... வாக்காளர்கள் தவிப்பு
குளறுபடிகளுடன் சிறப்பு முகாம்கள் ;முன்னறிவிப்பு இல்லை... அலுவலர்கள் மாயம்... வாக்காளர்கள் தவிப்பு
குளறுபடிகளுடன் சிறப்பு முகாம்கள் ;முன்னறிவிப்பு இல்லை... அலுவலர்கள் மாயம்... வாக்காளர்கள் தவிப்பு
ADDED : நவ 17, 2025 01:32 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த முகாம்களில், பெரும் குளறுபடி காணப் பட்டது. முறையான முன்னறி விப்பு இல்லை; அலுவலர்கள் வரவில்லை என வாக்காளர்கள் குற்றம் சாட்டினர்.
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம், கடந்த 4ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் வீடு தேடிச் சென்று தீவிர திருத்த படிவம் வழங்கும் பணிகளில், 2,536 பி.எல்.ஓ.,க்கள்(ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள்) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் தொகுதிகளில், பி.எல்.ஓ.,க்கள் பலர், கோவில் உள்ளிட்ட பொது இடங்கள், மளிகைக்கடைகளில் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு, மக்களை வரவழைத்து மனுக்களை வழங்கியும், பூர்த்தி செய்த மனுக்களை பெற்றும் வருகின்றனர்.
'கடமை'க்காக பிரசாரம் நேற்றுமுன்தினமும், நேற்றும் ஓட்டுச்சாவடி மையங்களில், தீவிர திருத்தத்ததுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஆனால், முகாம் தொடர்பாக, மாவட்ட தேர்தல் பிரிவு மூலமோ, சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களாலோ, முறையான முன்னறிவிப்பு செய்யப்படவில்லை.
அரசியல் கட்சியினர் பரப்பிய தகவலின்பேரிலேயே, வாக்காளர் பலரும் முகாம் தொடர்பாக அறிந்துகொண்டனர். பல பகுதிகளில், முகாம் தொடர்பாக, நேற்று காலையில்தான் ஆட்டோவில் பிரசாரம் செய்யப்பட்டது.சொற்ப எண்ணிக்கையிலான வாக்காளரே முகாமுக்கு வந்தனர்.
நடக்காத முகாம்கள் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படாததால், பல ஓட்டுச்சாவடி மையங்களில் முகாமே நடத்தப்படவில்லை; சில ஓட்டுச்சாவடிகளில் முகாம் நடத்தியபோதும், பி.எல்.ஓ.,க்களே 'ஆப்சென்ட்' ஆகினர்.
நடைமுறைச் சிக்கல்கள் திருப்பூரில் பனியன் தொழிலாளரே அதிகம் உள்ளனர். காலையில் வேலைக்குச் செல்வோர், மாலை, இரவு நேரங்களிலேயே வீடு திரும்புகின்றனர். வாடகை வீடுகளில் வசிப்போர், திடீரென வேறு முகவரிக்கு செல்கின்றனர். குறுகிய நாட்களுக்குள் அனைத்து வாக்காளருக்கும் வீடு தேடிச் சென்று படிவம் வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அந்தவகையில், தீவிரத் திருத்த படிவம் வழங்கல் மற்றும் பெறுவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்துவது, அவசியம்தான்.
அதேநேரம், முறையான முன்னறிவிப்பின்றி, சில ஓட்டுச்சாவடிகளில் மட்டும் முகாம் நடத்துவதாலும், பி.எல்.ஓ.,க்களே ஆப்சென்ட் ஆவதாலும் வாக்காளர்களுக்கு வீண் அலைச்சலும், குழப்பமுமே ஏற்படுகிறது.
எழும் சந்தேகங்கள் தங்கள் ஓட்டுச்சாவடியில் முகாம் நடைபெறுமா; பி.எல்.ஓ. வந்திருப்பாரா; முகாமை தவறவிட்டால், படிவம் கைக்கு வந்து சேருமா என்கிற சந்தேகங்கள் ஏற்படுகின்றன. மாவட்ட நிர்வாகம், அந்தந்த வாக்காளர் உதவி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, முறையான முன்னறிவிப்பு செய்து சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்பது, வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் கோரிக்கையாக உள்ளது.
ஏமாற்றம்
திருப்பூர் - தாராபுரம் ரோடு, கோவில்வழியில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில், ஐந்து ஓட்டுச்சாவடிகள் உள்ளன. சிறப்பு முகாம் நடப்பதாக அறிந்து, புதுார் ரோடு, பிள்ளையார் நகர், சேரன் நகர் உள்பட சுற்றுப்பகுதி வாக்காளர் பலர் வந்தனர். ஆனால், மூன்று பி.எல்.ஓ.,க்கள் ஓட்டுச்சாவடி மையத்துக்கு வரவில்லை. இதையடுத்து, படிவம் பெறுவதற்காக வந்த வாக்காளர் பலர், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சுழல வேண்டும்
திருப்பூர் பனியன் நிறுவனங்களில், வெளிமாவட்ட தொழிலாளரே அதிகம் பணிபுரிகின்றனர். சிலர் சொந்த ஊரிலேயே வாக்காளராக தொடர்கின்றனர்; பலர், திருப்பூர் வாக்காளராக மாறிவிட்டனர். இன்னும் சிலர், சொந்த ஊரிலும், திருப்பூரிலும் என இரட்டை பதிவு வாக்காளராக தொடர்கின்றனர். இறந்த வாக்காளர் பலர், வாக்காளர் பட்டியலில் உயிர் வாழ்ந்தகொண்டிருக்கின்றனர். தீவிர திருத்த பணிகளை திறம்பட மேற்கொண்டு, நுாறு சதவீதம் செம்மையான வாக்காளர் பட்டியல் தயாராக, பி.எல்.ஓ.க்கள் முதலான தேர்தல் பிரிவு அதிகாரிகள் அனைவரும் சிறப்பாக சுழல வேண்டும்.

