/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை துவங்குகிறது நவராத்திரி விழா: கோவில்களிலும் வீடுகளிலும் கமழப் போகுது பக்தி மணம்!
/
நாளை துவங்குகிறது நவராத்திரி விழா: கோவில்களிலும் வீடுகளிலும் கமழப் போகுது பக்தி மணம்!
நாளை துவங்குகிறது நவராத்திரி விழா: கோவில்களிலும் வீடுகளிலும் கமழப் போகுது பக்தி மணம்!
நாளை துவங்குகிறது நவராத்திரி விழா: கோவில்களிலும் வீடுகளிலும் கமழப் போகுது பக்தி மணம்!
ADDED : அக் 02, 2024 06:44 AM

திருப்பூர் : இன்றைய மகாளயபட்ஷ அமாவாசையை தொடர்ந்து, கோவில் மற்றும் வீடுகளில், நவராத்திரி கொலு வழிபாடு, நாளை துவங்குகிறது.
உலகில் தீமையை அழித்து, நன்மையை பாதுகாக்க, அம்பிகை தவம் இருந்த காலமே, நவராத்திரி என்று ஆன்மிக பெரியோர் கூறுகின்றனர். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியை வழிபட்டு, வீரம், செல்வம், கல்வி ஆகிய வரங்களை பெறுவதே இவ்வழிநாட்டின் நோக்கம்.
கோவில் மற்றும் வீடுகளில், ஏழு படிநிலைகளுடன் கொலு அமைக்கப்படுகிறது. புல், செடி, கொடி போன்ற ஓரறிவு தாவர பொம்மைகள், முதல் படியில் வைக்கப்படுகின்றன. இரண்டாவது படியில், நத்தை, சங்கு போன்ற இரண்டு அறிவு ஜந்துக்களின் பொம்மை.
மூன்றாவது படியில், கரையான், எறும்பு பொம்மை; 4வது படியில் நான்கறிவு உள்ள, நண்டு, வண்டு போன்ற பொம்மைகள்; 5வது படியில், ஐந்தறிவு ஜீவன்களான, மிருகம் மற்றும் பறவைகள் பொம்மைகள்; 6வது படியில், மனித பொம்மைகள்.
ஏழாம் படிநிலையில், மனிதர் என்ற நிலையில் இருந்து யர்ந்த சித்தர், ரிஷிகள், மகரிஷிகள் பொம்மைகள்; 8வது படியில், தேவர்கள், அஷ்டதிக் பாலர்கள், நவகிரக அதிபதிகளின் பொம்மைகள்; 9வது படியில், விநாயகர் சிலை, மும்மூர்த்திகள் மற்றும் முப்பெரும் தேவியர்களின் சிலைகளை வைத்து வழிபட வேண்டும் என்று, வழிபாட்டு நுால்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல், செடி கொடிகளும் இறைவனை வழிபட்டால், உயர்நிலையான இறைநிலையை அடையலாம் என்ற தத்துவத்தை விளக்கும் வகையிலேயே, கொலு படிகள் அமைக்கப்படுகின்றன. தினமும், வெவ்வேறு வகையான மலர்களில், விதவிதமான பட்சணங்களை படைத்து, பஜனைகள் பாடி, கூட்டு வழிபாடாக நடத்துவதால், நவராத்திரி கொலு வழிபாட்டுக்கு பலன் அதிகம்.
நவராத்திரியின், ஒன்பதாம் நாளில் தான், சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. தொழிற்சாலைகள், வீடுகளில், தொழிற்கருவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.
பொரி - கடலை, சுண்டல், சர்க்கரை பொங்கல், மிட்டாய்கள், கற்கண்டு, பழவகைகள், தேங்காய், பழம் என படைத்து, நவராத்திரி விழா 11ம் தேதி நிறைவு செய்யப்படுகிறது. தவமிருந்த அம்பிகை, அரக்கனை வதம் செய்த நாள், விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. அன்று, சிவாலயங்கள், பெருமாள் கோவில், முருகப்பெருமான் கோவில் என, பெரும்பாலான கோவில்களில், அம்பு சேர்வை விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.
எதிர்கால சந்ததியினருக்கு, ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளை கற்றுணர்த்தும் வகையில், நவராத்திரி விழாவை கொண்டாட வேண்டுமென, சிவாச்சாரியார்கள் கூறுகின்றனர்.