/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுமுக முடிவு எட்டப்படாத பேச்சுவார்த்தை
/
சுமுக முடிவு எட்டப்படாத பேச்சுவார்த்தை
ADDED : மார் 01, 2024 12:31 AM

திருப்பூர்;''வேலம்பட்டி சுங்கச்சாவடி இன்று செயல்பாட்டுக்கு வராது'' என, விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் உறுதி அளித்தார்.
திருப்பூர் - தாராபுரம் ரோடு, வேலம்பட்டியில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து, விவசாய அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றன. இந்நிலையில், மார்ச் 1 முதல் (இன்று) சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ஓடை புறம்போக்கில் அமைந்துள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டுவரக்கூடாது என, விவசாய அமைப்புகள் குரல் எழுப்பிவருகின்றன. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், வேலம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்க தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், 'வேலம்பட்டி சுங்கச்சாவடியை இரவோடு இரவாக செயல்பாட்டுக்கு கொண்டுவரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். வேலம்பட்டி சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வருமா; வராதா என வெளிப்படையாக தெரிவியுங்கள்,' என்றார்.
அதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ், 'வேலம்பட்டி சுங்கச்சாவடி நிச்சயமாக, மார்ச் 1ம் தேதி செயல்பாட்டுக்கு வராது' என பதிலளித்தார்.
15 நாட்களுக்கு பின்மீண்டும் அமைதி பேச்சு
வேலம்பட்டி சுங்கசாவடி தொடர்பான பேச்சு திருப்பூர் சப்-கலெக்டர் சவுமியா தலைமையில் நேற்று மாலை நடந்தது. அவிநாசிபாளையம் ஊராட்சி தலைவர் நடராஜ், அலகுமலை ஊராட்சி தலைவர் துாயமணி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன், விவசாயிகள் கட்சி பிரதிநிதிகள் பரமசிவம் உள்ளிட்டோர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை கமிஷனர் என, பலரும் பங்கேற்றனர்.
அமைதி பேச்சில் எவ்வித சுமுக முடிவும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக, 15 நாட்களுக்கு பின் மீண்டும் அமைதி பேச்சு நடத்தி, அமைதி குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும், அதுவரை பழைய நிலையை தொடரும் என்று சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.

