/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் அருகே புதிய கற்கால சான்றுகள்: தொல்லியல் ஆர்வலர்கள் கண்டுபிடிப்பு
/
திருப்பூர் அருகே புதிய கற்கால சான்றுகள்: தொல்லியல் ஆர்வலர்கள் கண்டுபிடிப்பு
திருப்பூர் அருகே புதிய கற்கால சான்றுகள்: தொல்லியல் ஆர்வலர்கள் கண்டுபிடிப்பு
திருப்பூர் அருகே புதிய கற்கால சான்றுகள்: தொல்லியல் ஆர்வலர்கள் கண்டுபிடிப்பு
ADDED : ஜூலை 18, 2025 12:23 AM

திருப்பூர்: திருப்பூர் அருகே புதிய கற்கால சான்றுகளான, கல்லாயுத குழிகள் கண்டறியப்பட்டுள்ளது.
தொல்லியல் வெளிகளை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் யாக்கை மரபு அறக்கட்டளை குழுவை சேர்ந்த அருண்குமார் என்பவர் கொடுத்த தகவல் அடிப்படையில் குமாரவேல், சுதாகர் நல்லியப்பன், அருண்ராஜா மோகன் உள்ளிட்ட குழுவினர், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில், 'கொல்லன் பாறை' என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில், ஒன்பது கல் தோய்ப்பு குழிகள், நுண்கற்கருவிகள் மற்றும் இரும்புக்கால பண்பாட்டு எச்சங்களான இரும்புக்கசடு குவியல்கள் ஆகியவை ஒரே இடத்தில் இருப்பது தெரிய வந்தது.அவற்றை ஆவணப்படுத்திய யாக்கை குழுவினர் கூறியதாவது:
வெள்ளகோவில் சுற்றுவட்டார நிலங்கள் தொன்மையான மேய்ச்சல் பயன்பாட்டுக்குரிய, முல்லை திணையின் அடையாளமாக இன்றளவும் உள்ளது. இங்குள்ள காங்கயம் காளைகள் உள்ளிட்ட தனித்துவமான நாட்டின் கால்நடைகளும், பண்பாட்டின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. தற்போது கண்டறியப்பட்ட கற்குழிகள், புதிய கற்கால பண்பாட்டு காலத்தில், ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்ட கற்களை தீட்டுவதற்கும, பண்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது, தெரிய வருகிறது.
கொங்கு பகுதியில் அவிநாசி அருகே தத்தனுார், நடுவச்சேரி, கேதையறும்பு ஆகிய இடங்களுக்கு அடுத்தபடியாக வெள்ளகோவில் பகுதியும் கல்லாயுத குழிகளை கொண்டிருக்கும் இடத்தின் பட்டியலில் இணைகிறது.
பொதுவாக, இவ்வகை தொல்லியல் இடங்கள், வலிமையான பாறைத் தன்மையுடைய குன்றுகள், வற்றாத நீரூற்று அல்லது சுனை இருக்கும் இடங்களில் மட்டுமே தென்படும். வெள்ளகோவில் பகுதியிலும் கிழக்கு தொடர்ச்சி மலையில் காணப்பெறும் பாறைகள் போன்று, வலுவான கிரானைட் தன்மையுடையதாகவே உள்ளது.
'கொல்லன் பாறையில் உள்ள சுனை, கடும் கோடையிலும் வற்றாத இயல்புடையது' என, உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இங்குள்ள வனப்பகுதியில் நுண்கற்கால கற்கருவிகள் மற்றும் இரும்புக்கசடு குவியலையும் காண முடிகிறது. கற்குழிகளை, சிவன்மலை முருகனின் பாதம் என கருதுகின்றனர். சிவன்மலைக்கு பாதயாத்திரை செல்லும் முன், இந்த இடத்தில் வழிபாடு செய்துவிட்டு செல்வது இன்றளவும் அப்பகுதி மக்களின் வழக்கமாக உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.