/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேரிடர் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்!
/
பேரிடர் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்!
ADDED : மே 24, 2025 11:16 PM
திருப்பூர்: தென்மேற்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
கோடை காலம் முடிவடைந்து, தென்மேற்கு பருவ காலம் துவங்க உள்ளது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள தேவையான ஆயத்த பணிகளை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.
வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு, போலீஸ், நெடுஞ்சாலை, உள்ளாட்சி அமைப்புகள் அனைத்து துறையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
பேரிடர் மேலாண்மை துறை சார்பில், தென்மேற்கு பருவமழை காலத்தை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமைவகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ், பேரிடர் மேலாண்மை துறை தனி தாசில்தார் பானுமதி ஆகியோர், பேரிடர் காலத்தை திறம்பட எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் 41 இடங்கள் உள்ளன. இவற்றில், மிக அதிகமாக பாதிக்கப்படும் மூன்று இடங்கள்; குறைவாக பாதிக்கப்படும் இடங்களாக 37 உள்ளன. வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டால், பொதுமக்களை தங்கவைப்பதற்காக, பள்ளி, கல்லுாரிகள், திருமண மண்டபம் என, 52 நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட, 636 ஆண்; 33 பெண்கள் என, மொத்தம் 669 முதல்நிலை தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் பேரிடர் தொடர்பாக தெரிவிப்பதற்காக, கலெக்டர் அலுவலகத்தில், 1077 என்கிற இலவச எண் செயல்பாட்டில் உள்ளது.
அனைத்து வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்களிலும், வரும் ஜூன் 1 ம் தேதி முதல், முழு நேரமும் இயங்கும் வெள்ள கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.