/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில் நிலையத்தில் புதிய 'எஸ்கலேட்டர்'
/
ரயில் நிலையத்தில் புதிய 'எஸ்கலேட்டர்'
ADDED : ஏப் 26, 2025 11:02 PM

திருப்பூர்: ரயில் பயணியர் சிரமத்தை குறைக்க, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதலாவது பிளாட்பார்மில் எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) செயல்பாட்டில் உள்ளது. இரண்டாவது பிளாட்பார்மில் எஸ்கலேட்டர் நிறுவும் பணி கடந்தாண்டு இறுதியில் துவங்கியது. எஸ்கலேட்டர் நிறைவு பெறும் பகுதியில், தரைத்தளம் உயரம் குறைவாக இருந்ததால், சாலையை சீரமைக்கும் பணி ஒரு மாதம் நடந்தது; ஜனவரியில் ராட்சத கிரேன் மூலம் எஸ்கலேட்டர் நிறுவப்பட்டது.
மேற்குப்பகுதியில் உள்ள உயர்மட்ட பாலத்துடன் எஸ்கலேட்டரை இணைக்கும் பணி இரண்டு மாதங்களாக நடந்த நிலையில், கடந்த மார்ச் மாத துவக்கத்தில் அப்படியே விடப்பட்டது. அவ்வப்போது பொறியியல், மின்பராமரிப்பு குழுவினர் மட்டும் பார்வையிட்டு சென்றனர். ஏப்ரல் மாதம் நிறைவு தருவாயை எட்டிய நிலையில், இரண்டாவது பிளாட்பார்மில் எஸ்கலேட்டர் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது.
ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ''மின் இணைப்பு, இயக்கம் உள்ளிட்ட, 95 சதவீத பணி முழுமையாக முடிக்கப்பட்டு, இருமுறை ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. பயணிகள் எஸ்கலேட்டரில் ஏறி இறங்கும் இடம் தரைத்தளம் சீரமைக்க வேண்டியுள்ளது. பணி முடிந்து, மே முதல் வாரத்துக்குள் திறக்கப்பட்டு விடும்'' என்றனர்.

