/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பட்ஜெட்டில் புதுப்புது திட்டங்கள்...
/
மாநகராட்சி பட்ஜெட்டில் புதுப்புது திட்டங்கள்...
UPDATED : பிப் 27, 2026 07:29 AM
ADDED : பிப் 27, 2026 06:10 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியின் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் மூன்று கோடி ரூபாய் உபரி பட்ஜெட்டாக அமைந்துள்ளது. பட்ஜெட் அறிக்கையில், சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியின், வரும் 2026- 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் அமித் முன்னிலை வகித்தார். மாநகராட்சி நிதிக்குழு தலைவர் கோமதி நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பித்தார்.
பட்ஜெட் உபரி பட்ஜெட்டாக அமைந்துள்ளது. வரும் நிதியாண்டில் வருவாய் நிதி வரவினம் - 874.72 கோடி ரூபாய்; குடிநீர் நிதி வரவினம் 394.78 கோடி ரூபாய்; ஆரம்ப கல்வி நிதி வரவினம் 22.6 கோடி ரூபாய்; மொத்த வரவினம் 1,292.12 கோடி ரூபாய்.
வருவாய் நிதியில் செலவு - 848.48 கோடி ரூபாய்; குடிநீர் நிதியில் செலவு- 422.63; ஆரம்ப கல்வி நிதி செலவினம் - 17.95 கோடி ரூபாய்; உபரி - 3 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மாநகராட்சி பட்ஜெட்டில் புதுப்புது திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வடக்கு பகுதிக்கு முக்கியத்துவம் வகையிலும் திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
திடக்கழிவு மேலாண் இயந்திரம் மார்ச் 3 முதல் இயக்கம்
மேயர் பேசியதாவது: குடிநீர் வினியோகம் முற்றிலும் 'ஸ்கேடா' முறையில் கண்காணிக்கப்படும். தற்போது 4 வார்டுகளில் உள்ள 24 மணி நேர குடிநீர் சப்ளை 10 வார்டுகளுக்கு விரிவுபடுத்தப்படும். அனைத்து வார்டுகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அனைத்து வார்டுகளுக்கும் ஆரம்பசுகாதார மையம் அமைக்கப்படும்.
![]() |
இடுவாயில் தற்காலிகமாக 3.65 கோடி ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிரந்தர மையம் அமைத்து இந்த இடம் முன் போல் சீரமைக்கப்படும். திடக்கழிவு மேலாண்மையில் அமைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் மார்ச் 3ம் தேதி பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.
நகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், பி.என். ரோடு மும்மூர்த்தி நகர், பிச்சம்பாளையம் லட்சுமி நகர், மும்மூர்த்தி நகர் மேற்கு வழியாக பூண்டி ரிங் ரோடு ஆகிய பகுதியில், 2.6 கோடி ரூபாய் மதிப்பில் இணைப்பு ரோடுகள் அமைக்கப்படும்.
ஏற்கனவே மூன்று இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஈஸ்வரன் கோவில் வீதி பாலம் ஏப்ரல் மாதத்தில் திறக்கப்படும். நல்லாறு பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி நிறைவடையவுள்ளது. இரு புதிய பாலங்கள் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்படும். ரயில்வே பாதையைக் கடக்கும் வகையில் உயர் மட்ட மற்றும் சுரங்கப்பாதைகள் ஏழு இடங்களில் அமைக்கப்படும். கழிவுகளிலிருந்து பயோ காஸ் உற்பத்தி, மின்சாரம் உற்பத்தி ஆகிய திட்டங்கள் இந்தாண்டில் துவங்கப்படும். மின்னணு கழிவுகள் சேகரிக்க வாரம்தோறும் முகாம் நடத்தப்படும்.


