/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நிப்ட்-டீ' பிரீமியர் லீக் கிரிக்கெட் கோலாகல துவக்கம்
/
'நிப்ட்-டீ' பிரீமியர் லீக் கிரிக்கெட் கோலாகல துவக்கம்
'நிப்ட்-டீ' பிரீமியர் லீக் கிரிக்கெட் கோலாகல துவக்கம்
'நிப்ட்-டீ' பிரீமியர் லீக் கிரிக்கெட் கோலாகல துவக்கம்
ADDED : ஆக 10, 2025 02:50 AM

'நி ப்ட்-டீ' கல்லுாரி, டெக்னோ ஸ்போர்ட்ஸ்' சார்பில், அப்துல் கலாம் சுழற்கோப்பைக்கான, 7வது 'நிப்ட்-டீ' பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது.
பின்னலாடை நிறுவன அணிகள் பங்கேற்கும், அப்துல் கலாம் சுழற்கோப்பைக்கான, ஏழாவது நிப்ட்-டீ பிரீமியர் லீக், கிரிக்கெட் போட்டிகள், நிப்ட்-டீ கல்லுாரி வளாகத்தில் நேற்று துவங்கியது. இதனை நிப்ட்-டீ கல்லுாரி, டெக்னோ ஸ்போர்ட்ஸ் மற்றும் 'தினமலர்' நாளிதழ் ஆகியன இணைந்து நடத்துகிறது.
திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த 20 பின்னலாடை உற்பத்தி நிறுவன கிரிக்கெட் அணிகள், மோதுகின்றன. முதலில், 15 ஓவர்களுடன் லீக் போட்டிகளும்; 20 ஓவர்களுடன் காலிறுதி போட்டி 'நாக்-அவுட்' முறையிலும் நடைபெற உள்ளது. 'லீக்', காலிறுதி, அரை இறுதி போட்டிகளை தொடர்ந்து, இறுதிப்போட்டிகள், வரும் நவம்பர் 9ம் தேதி வரை நடைபெறும்.
கிரிக்கெட் தொடரில், முதலிடம் பிடிக்கும் அணிக்கு, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் அப்துல் கலாம் சுழற்கோப்பை; இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசுக்கோப்பை; மூன்று மற்றும் நான்காமிடம் பிடிக்கும் அணிகளுக்கு பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. நேற்று, 15 ஓவர்களுடன், 'லீக்' போட்டி துவங்கியது; நான்கு பிரிவுகளாக, எட்டு அணிகள் மோதின. காலை, 7:00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி நிர்வாகிகள், போட்டியை துவக்கி வைத்தனர்.
ஈஸ்ட்மேன் அணி அபார வெற்றி முதலில், ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட் அணியும், தங்கம்மன் பேஷன்ஸ் அணியும் களமிறங்கின. முதலில் பேட்டிங் செய்த தங்கம்மன் பேஷன்ஸ் அணி, 15 ஓவர்களில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 47 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து பேட்டிங் செய்த, ஈஸ்ட்மேன் அணி, 5.4 ஓவர்களில், இரண்டு விக்கெட் இழப்புக்கு, 50 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில், எஸ்.என்.,-1 எக்ஸ்போர்ட்ஸ் அணியும், எஸ்.டி., வாரியர்ஸ் அணியும் மோதின; முதலில் களமிறங்கிய எஸ்.என்., -1 அணி, ஐந்து விக்கெட் இழப்புக்கு, 112 ரன்களை குவித்தது; அடுத்து களமிறங்கிய எஸ்.டி., வாரியர்ஸ் அணி, எட்டு விக்கெட் இழப்புக்கு, 74 ரன்கள் எடுத்தது; எஸ்.என்.,---1 எக்ஸ்போர்ட்ஸ் அணி, 38 ரன் வித்யாசத்தில் வென்றது.
மூன்றாவது போட்டி யில், டெக்னோ ஸ்போர்ட் அணியும், எஸ்.என்.,-2 அணியும் மோதின. முதலில் களமிறங்கிய, எஸ்.என்.,-2 எக்ஸ்போர்ட்ஸ் அணி, எட்டு விக்கெட் இழப்புக்கு, 90 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய, டெக்னோ ஸ்போர்ட் அணி, 13.4 ஓவர்களில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 94 ரன்கள் எடுத்து, வென்றது.
நான்காவது போட்டியில், சுலோச்சனா காட்டன் மில்ஸ் அணியும், அனுகிரஹா பேஷன்ஸ் அணியும் களமிறங்கின. முதலில் களமிறங்கிய சுலோச்சனா காட்டன் அணி, 15 ஓவர்களில், ஐந்து விக்கெட் இழப்புக்கு, 135 ரன்களை குவித்தது; அடுத்து களமிறங்கிய, அனுகிரஹா பேஷன்ஸ் அணி, 12.4 ஓவர்களில், 10 விக்கெட்டுகளில், 81 ரன் எடுத்தது. 54 ரன்கள் வித்யாசத்தில், சுலோச்சனா காட்டன் மில்ஸ் அணி வெற்றி பெற்றது. இன்று நடக்கும் இரண்டாவது நாள் போட்டியில், நான்கு பிரிவுகளாக, எட்டு அணிகள் விளையாட உள்ளன.