/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறந்தவெளியில் வீசப்படும் இறைச்சி கழிவு பாதிப்பு அதிகரித்தும் நடவடிக்கையில்லை
/
திறந்தவெளியில் வீசப்படும் இறைச்சி கழிவு பாதிப்பு அதிகரித்தும் நடவடிக்கையில்லை
திறந்தவெளியில் வீசப்படும் இறைச்சி கழிவு பாதிப்பு அதிகரித்தும் நடவடிக்கையில்லை
திறந்தவெளியில் வீசப்படும் இறைச்சி கழிவு பாதிப்பு அதிகரித்தும் நடவடிக்கையில்லை
ADDED : மார் 17, 2024 11:26 PM
உடுமலை:இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில், வீசுவதால், கிராமங்களில் பல்வேறு பாதிப்புகள் அதிகரித்தும், ஒன்றிய நிர்வாகத்தினர் தரப்பில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், 70க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன.
இங்கு, ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினரின் அனுமதி பெற்றும், பெறாமலும், நுாற்றுக்கணக்கான இறைச்சிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
கிராமங்களிலுள்ள, கோழி மற்றும் ஆட்டிறைச்சி கடைகளில், கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை.
இறைச்சி விற்பனைக்குப்பிறகு, அனைத்து வகை கழிவுகளையும், கிராமத்திலுள்ள, திறந்தவெளியில், ரோட்டோரத்தில், வீசுப்படுகிறது.
சில கிராமங்களில், குளம், குட்டை உட்பட நீராதாரங்களில், கழிவுகள் வீசுப்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு நிரந்தரமாகியுள்ளது.
நகரப்பகுதிகளில், இறைச்சிக்கழிவுகளை அப்புறப்படுத்த, பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால், ஊராட்சிகளில், எந்த விதிமுறைகளையும் கண்டுகொள்வதில்லை.
ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தில், வீடுதோறும், பணியாளர்கள், மட்கும், மட்காத குப்பையை பெற்று தரம் பிரிக்கின்றனர். ஆனால், இத்திட்டத்திலும், இறைச்சிக்கழிவுகளை அகற்றுவதில்லை. குடிமங்கலம் ஒன்றியத்தில், பிரதான நீராதாரமான உப்பாறு ஓடை இறைச்சிக்கழிவு கிடங்காகவே மாற்றப்பட்டு விட்டது.
கால்நடைகளுக்கு பாதிப்பு
கிராமங்களில், திறந்தவெளியில், இறைச்சிக்கழிவு கொட்டும் இடத்தில், தெருநாய்கள் அப்பகுதியை முற்றுகையிடுகின்றன.
இந்த இறைச்சியை உண்ணும் நாய்கள், ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்களை துரத்துவதால், விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், நாய்கள், இரைக்காக, அருகிலுள்ள கால்நடைகளை தாக்குகின்றன.
இதனால், கால்நடை வளர்ப்போர் அச்சத்தில் உள்ளனர். கழிவுகள் கொட்டும் பிரச்னையை ஒன்றிய, ஊராட்சி நிர்வாகங்கள் கண்டுகொள்ளாத நிலையில், பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு வருகிறது.
எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், கிராமங்களில், இறைச்சிக்கழிவுகள் அப்புறப்படுத்துவதற்கான விதிமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

