/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ்கள் இல்லை; மாணவர்கள் தவிப்பு
/
பஸ்கள் இல்லை; மாணவர்கள் தவிப்பு
ADDED : ஆக 16, 2025 11:08 PM
திருப்பூர்; திருப்பூர் - கோவை மார்க்கமாக, 'பீக் ஹவர்ஸ்' எனப்படும், காலை, மாலை நேரங்களில் தேவைக்கேற்ப பஸ் இயக்கப்படாததால், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு இடையே பயணிக்க வேண்டியிருக்கிறது.
திருப்பூர், பூண்டி, அவிநாசி, தெக்கலுார், கருமத்தப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மற்றும் பொது மக்கள், தங்கள் பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு, தனியார் துறை பணி நிமித்தமாக தினமும், கோவை சென்று வருகின்றனர்.
இதில் பூண்டி, அவிநாசி ஆகிய இடங்களில், 'பீக் அவர்ஸ்' எனப்படும் காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரை பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக, அவிநாசி பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவ, மாணவியர், பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
திருப்பூர் மட்டுமின்றி சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இருந்து கோவை செல்லும் பஸ்களும், அவிநாசி வந்து தான் செல்லும்; இருப்பினும், அங்கிருந்தே நிரம்பி வழியும் கூட்டத்துடன் வரும் பஸ்களில், மாணவ, மாணவியர், பொது மக்களால் ஏறி செல்ல முடிவதில்லை.
உள்ளூர் பயணமும் அவதி இப்பிரச்னை ஒரு புறமிருக்க திருப்பூர், ஈரோடு, சேலத்தில் இருந்து கோவை வரும் பஸ்களில், அவிநாசி, தெக்கலுார் செல்லும் பயணிகளை சில பஸ்சில் ஏற்ற மறுக்கின்றனர். 'அவிநாசி செல்லாது; பைபாஸ் வழியாக சென்று விடும்' என நடத்துனர்கள் கூறி விடுகின்றனர்.
கடந்த, 5 ஆண்டுக்கு முன் புறவழிச்சாலை உருவான பின், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டுக்குள் தனியார் மற்றும் அரசு பஸ்கள் வராமல் 'பைபாஸ்' வழியாக கடந்து செல்கின்றன. இது, விதிமீறிய செயல் என்ற போதிலும், இதனை சரி செய்ய, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுப்பதில்லை என்பது பயணிகளின் குற்றச்சாட்டு.
அதேபோல், அவிநாசியில் இருந்து சேவூருக்கு, 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படும் என்ற அறிவிப்பு, சுவரில் மட்டுமே எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 'பீக் அவர்ஸ்' நேரங்களில், 30 நிமிடத்துக்கு மேல் காத்திருந்தாலும், பஸ் வருவதில்லை என்கின்றனர் பயணிகள். குறிப்பிட்ட நேரத்தில் வால் பிடித்தபடி, ஒரே நேரத்தில் பஸ்கள் வரிசையாக வருவதும், அதற்கு பின் ஒரு மணி நேரம் காத்திருந்தாலும் பஸ்கள் வராமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என, அனுபவ ரீதியான சிரமத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இவ்வாறு, திருப்பூர் - கோவை இடைபட்ட பகுதிகளில் உள்ள மக்களின் போக்குவரத்து சேவை என்பது, பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.