/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடமையே பிரதானம் கண் அயர நேரம் இல்லை
/
கடமையே பிரதானம் கண் அயர நேரம் இல்லை
UPDATED : மார் 18, 2024 01:44 AM
ADDED : மார் 18, 2024 12:24 AM

லோக்சபா தேர்தல் விதிமீறல்களை கண்டறிய, மாவட்டம் முழுக்க, 24 மணி நேரமும் பறக்கும் படையினர் சுழன்று வருகின்றனர். ஓட்டுப்பதிவு முடியும் வரை, அவர்கள் கண்ணயர நேரம் இல்லை.
நேற்று முன்தினம் மாலை முதல் லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
வாக்காளருக்கு வழங்குவதற்காக பணம், பரிசு பொருட்கள் கொண்டுசெல்வது உள்ளிட்ட விதிமீறல்களை கண்டறிந்து தடுப்பதற்காக, சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும்படை; 3 நிலை கண்காணிப்புக்குழு வீதம் 48 குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும், ஒரு கண்காணிப்புக்குழு அலுவலர் தலைமையில், நான்கு போலீசார், வீடியோ பதிவாளரை உள்ளடக்கிய ஆறுபேர் இடம் பெற்றுள்ளனர்.
நிகழ்வுகளை நேரலையில் வீடியோ பதிவு செய்யும்வகையில், பறக்கும்படை வாகனங்களின் மேற் பகுதியில் சுழல் கேமரா மற்றும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வாகன நகர்வுகளை துல்லியமாக கண்காணிக்கும்வகையில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. எட்டு மணி நேரத்துக்கு ஒரு குழு என்கிற அடிப்படையில், மூன்று ஷிப்ட்டுகளாக, பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுக்கள், 24 மணி நேரமும், சுழன்று வருகின்றனர்.
இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி, உரிய ஆவணமின்றி பணம், பரிசு பொருட்கள், மதுபாட்டில்கள் கொண்டுசெல்லப்படுகிறதா என, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளன.
உரிய ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்குமேல் எடுத்துச்செல்லப்படும் பணம்; 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
விதிமீறி எடுத்துச்செல்லப்படும் பணம், மது, பரிசுப்பொருள் குறித்த விவரங்களை, பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு அதிகாரிகள், தங்கள் மொபைல் போனில் நிறுவப்பட்டுள்ள இ.எஸ்.எம்.எஸ்., செயலியில், வீடியோ காட்சிகளுடன் உடனுக்குடன் பதிவேற்றம் செய்கின்றனர்.
சிக்கியது மது
திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதியில், கிருஷ்ணகுமரன் தலைமையிலான நிலை கண்காணிப்புக்குழுவினர், நேற்றுமுன்தினம் நள்ளிரவு, 2:00 மணிக்கு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். விதிமீறி காரில் கொண்டுசெல்லப்பட்ட 6 லிட்டர் மது பாட்டில்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை பாயும்
பணம், பரிசு பொருள் பட்டுவாடா, அரசியல் கட்சிகளில் தவறான விளம்பரங்கள் உட்பட தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பெற்று, நடவடிக்கை எடுப்பதற்காக,திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் அளிப்பதற்காக, 1800 425 6989 என்கிற டோல்ப்ரீ எண் செயல்பாட்டில் உள்ளது.
இதுதவிர, மொபைல் போனில் சி-விஜில் செயலியை நிறுவியும், விதிமீறல் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது, 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

