/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அபராதம் இல்லை... கேள்வி கிடையாது: 'ஸ்ப்ரீ-2025' திட்டம் பயன்படுத்த அழைப்பு
/
அபராதம் இல்லை... கேள்வி கிடையாது: 'ஸ்ப்ரீ-2025' திட்டம் பயன்படுத்த அழைப்பு
அபராதம் இல்லை... கேள்வி கிடையாது: 'ஸ்ப்ரீ-2025' திட்டம் பயன்படுத்த அழைப்பு
அபராதம் இல்லை... கேள்வி கிடையாது: 'ஸ்ப்ரீ-2025' திட்டம் பயன்படுத்த அழைப்பு
ADDED : ஜூலை 30, 2025 10:27 PM

திருப்பூர்; 'இ.எஸ்.ஐ., ல் பதிவு செய்ய தவறிய நிறுவனங்கள், 'ஸ்ப்ரீ - 2025' திட்டத்தில், முந்தைய பங்களிப்பு தொகை மற்றும் அபராதமின்றி பதிவு செய்து கொள்ளவேண்டும்' என, இ.எஸ்.ஐ., துணை இயக்குனர் கார்த்திகேயன் பேசினார்.
இ.எஸ்.ஐ., சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ஸ்ப்ரீ - 2025' திட்டம் குறித்த விளக்க கூட்டம், திருப்பூரில், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) அரங்கில் நேற்று நடந்தது. 'சைமா' தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். 'சைமா' செயலாளர் கோவிந்தப்பன், துணைத் தலைவர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தனர்.
பணியில் சேர்ந்ததுமேஇ.எஸ்.ஐ., பயன்கள் கோவை மண்டல இ.எஸ்.ஐ., துணை இயக்குனர் கார்த்திகேயன் பேசியதாவது:
பத்துக்கு மேல் தொழிலாளரை கொண்ட நிறுவனங்கள், 21 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சம்பளம் பெறும் தொழிலாளரை கட்டாயம் இ.எஸ்.ஐ.,ல் இணைக்கவேண்டும். ஒரு தொழிலாளி பணியில் சேர்ந்த நாள் முதலே, அவர் இ.எஸ்.ஐ., பயன்களை பெற தகுதியானவராகிவிடுகிறார்.
ஒருவேளை, பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே, பணி நேரத்தில் தொழிலாளி உயிரிழக்கிறார் என்றாலும், இ.எஸ்.ஐ., சார்பில், அந்த தொழிலாளியின் சம்பளத்தில், 90 சதவீத தொகை, அந்த குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
பத்து நாட்களில் பதிவு அவசியம் இ.எஸ்.ஐ., பதிவு இல்லையெனில், குறிப்பிட்ட தொழிலாளியின் குடும்பத்துக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனம் பெருந்தொகையை தொழிலாளியின் குடும்பத்துக்கு வழங்க நேரிடும். இது, புதிய தொழில் முனைவோருக்கு மேலும் நெருக்கடியைதான் ஏற்படுத்தும். அந்தவகையில், இ.எஸ்.ஐ., என்பது, தொழிலாளருக்கு மட்டுமல்ல, தொழில்முனைவோருக்கும் உதவிகரமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு தொழிலாளி பணியில் சேர்ந்த பத்து நாட்களுக்குள், இ.எஸ்.ஐ., பதிவு செய்துவிடவேண்டும்.
புதிய நிறுவனங்கள் இ.எஸ்.ஐ.,ல் பதிவு செய்வதில் கால அவகாசம் வழங்கவேண்டும் என தொழில்முனைவோர் பலர் எதிர்பார்க்கின்றனர். டில்லியில், தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் 20 பேரை அங்கத்தினராக கொண்ட இ.எஸ்.ஐ., நிலைக்குழு செயல்படுகிறது. அந்த குழுதான், எத்தகைய முடிவுகளையும் எடுக்கமுடியும்.
டிச., 31 வரை திட்டம் அமல் இ.எஸ்.ஐ.,ல் தற்போது 'ஸ்ப்ரீ - 2025' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் துவங்கி பல ஆண்டுகளாகியும் இதுவரை இ.எஸ்.ஐ.,ல் பதிவு செய்யாத நிறுவனங்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சுயமாக தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும். இம்மாதம் 1ம் தேதி முதல் வரும் டிச. 31 ம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும்.
பதிவு செய்யாத நிறுவனங்கள், இந்த அவகாசத்துக்குள், பதிவு செய்து கொள்ளவேண்டும். 'ஸ்ப்ரீ' திட்டத்தில் பதிவு செய்யும் நிறுவனங்கள், கடந்த கால பங்களிப்பு தொகை, அபராதம் ஏதும் செலுத்த தேவையில்லை. மேலும், நிறுவனம் துவங்கிய காலம் முதல் இதுவரை ஏன் இ.எஸ்.ஐ.,ல் பதிவு செய்யவில்லை என்பன போன்ற கேள்விகளோ, சட்ட நடவடிக்கைகளோ எடுக்கப்படாது; எவ்வித ஆவண தணிக்கையும் மேற்கொள்ளப்படாது. எனவே, தொழில்முனைவோர் எவ்வித தயக்கமுமின்றி, உரிய கால அவகாசத்தை பயன்படுத்தி, தங்களிடம் பணிபுரியும் தகுதியான தொழிலாளர்களை இ.எஸ்.இ., ல் பதிவு செய்துகொள்ளவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இ.எஸ்.ஐ., மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், இ.எஸ்.ஐ., மருத்துவமனையின் சேவைகள் குறித்து விளக்கி பேசினார்.
முரண்பாடு கூடாது என்கிறார் அதிகாரி
பின்னலாடை துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்து, துணை இயக்குனர் கார்த்திகேயன் பேசியதாவது: ஏற்கனவே இ.எஸ்.ஐ., ல் பதிவு செய்த நிறுவனங்கள், வெவ்வேறு காரணங்களால் சில மாதங்கள் அல்லது ஆண்டுகளாக பங்களிப்பு தொகை செலுத்தாமல் இருந்திருக்கலாம். இத்தகைய நிறுவனங்கள், 'ஸ்ப்ரீ' திட்டத்தில் மீண்டும் பதிவு செய்யக்கூடாது. அவ்வாறு பதிவு செய்தால், வீண் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். சில நிறுவனங்கள், தொழில் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பல மாதங்களாக இயங்கவில்லை; சம்பளமும் வழங்கவில்லை என்கின்றன. அத்தகைய நிறுவனங்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை தணிக்கை செய்யும்போது, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருக்கும். ஒரு அரசு ஆவணத்தில் தொழிலாளருக்கு சம்பளம் வழங்கப்பட்டதாகவும், இ.எஸ்.ஐ., ல் தொழிலாளருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் முரண்பட்ட தகவல்களை அளிக்கும் நிறுவனங்களுக்கு உதவ இயலாது.