/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எவ்வளவோ பிரச்னைகள்... அவ்வளவும் தீர்வு கண்டால் நலமே
/
எவ்வளவோ பிரச்னைகள்... அவ்வளவும் தீர்வு கண்டால் நலமே
எவ்வளவோ பிரச்னைகள்... அவ்வளவும் தீர்வு கண்டால் நலமே
எவ்வளவோ பிரச்னைகள்... அவ்வளவும் தீர்வு கண்டால் நலமே
ADDED : ஜூன் 16, 2025 11:57 PM

திருப்பூர்; பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
கலெக்டர் கிறிஸ்துராஜ், தனி துணை கலெக்டர் (சமூகபாதுகாப்பு திட்டம்) பக்தவத்சலம் ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 492 மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதற்காக துறை சார்ந்த அரசு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருவலுார் பள்ளிக்குதேவை கழிப்பிடம்
அவிநாசி ஒன்றியம், கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள்:
பள்ளியில், கழிப்பிடம் மற்றும் சுற்றுச்சுவர் இல்லாதது மிகப்பெரிய குறையாக உள்ளது. ஏற்கனவே உள்ள கழிப்பிடம் சேதமடைந்து, பாதுகாப்பற்ற வகையில் உள்ளது. அன்னிய நபர்கள் உள்ளே நுழைந்து கழிப்பிடத்தை பயன்படுத்துகின்றனர். பள்ளிக்கு கழிப்பிடம் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து தர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவுநீர் வெளியேறநடவடிக்கை அவசியம்
அவிநாசி, பழங்கரை, சிவசக்தி நகர் பொதுமக்கள்:
சிவசக்தி நகரில், புதிய சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடை பெற்றுவந்தன.
பணிகளை முழுமையாக முடிக்காமல், பாதியிலேயே நிறுத்திவிட்டனர். இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி, குடியிருப்பு பகுதிகளில் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கால்வாயை முழுமையாக அமைத்து, கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது வழித்தடம்ஆக்கிரமிப்பு
கே.வி.ஆர்., நகர் நடராஜ்:
திருப்பூர் - மங்கலம் ரோடு, கே.வி.ஆர்., நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 35 குடும்பங்கள் வசிக்கிறோம். சாக்கடை கால்வாய், தெருவிளக்கு, குடிநீர் என எவ்வித அடிப்படை வசதியும் செய்துதரப்படவில்லை.
சிலர், பொது வழித்தடத்தை ஆக்கிரமித்து, கம்பி வேலி அமைத்துள்ளனர். 60 அடி அகல பாதை, இரண்டு அடியாக சுருங்கி விட்டது.ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இல்லாவிடில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்.
முழு நேர ரேஷன் கடைகவுன்சிலர் வேண்டுகோள்
திருப்பூர் மாநகராட்சி, 11வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ்:
மாநகராட்சி, 11வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 'வளர்மதி' சார்பில் இரு ரேஷன் கடைகள் உள்ளன. அனுப்பர்பாளையம் மற்றும் திலகர் நகர் ஆகிய பகுதிகளில் இக்கடைகள் உள்ளன.
இவற்றில் ஏராளமான ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்குகின்றனர். இந்த இருகடைகளும் பகுதி நேரக் கடைகளாக உள்ளன. இதனால், வாரத்தில் மூன்று நாள் மட்டுமே இவை செயல்படுகிறது.
இதனால், கார்டுதாரர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் இரு கடைகளும் முழு நேரக் கடைகளாக மாற்றி ஊழியர் நியமிக்க வேண்டும்.
வேலை உறுதி திட்டதொழிலாளர் குமுறல்
பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பெண்கள், குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
அப்பெண்கள் கூறியதாவது:
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பெத்தாமூச்சிபாளையம், கொத்து முட்டிபாளையத்தில் பணிபுரியும் எங்களுக்கு, தினமும், 336 ரூபாய்க்கு பதிலாக, வெறும் 97 ரூபாய், 104 ரூபாய் கூலி மட்டுமே வழங்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கணக்கு கேட்டால், முறையான பதிலளிப்பதில்லை.
வேலை வழங்கும் நாட்களையும் குறைத்துவிட்ட நிலையில், சம்பள தொகையையும் குறைத்து வழங்குவதால், மிகவும் சிரமப்படுகிறோம். எங்களுக்கு உரிய முழு சம்பள தொகையை பெற்றுத்தர வேண்டுமென கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். மனுவை பெற்றுக்கொண்ட டி.ஆர்.ஓ., இது தொடர்பாக பி.டி.ஓ.,விடம் விசாரித்து உரிய சம்பளம் பெற்றுத்தரப்படும் என, உறுதி அளித்துள்ளார்.
தாராபுரம் தாலுகா சின்னக்காம்பாளையத்தில், தாய் கோழிப்பண்ணை செயல்படுகிறது.
இப்பண்ணையால் ஈக்கள் பெருகியும், கடும் துர்நாற்றத்தாலும், குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரம் பாதிக்கப்படுவதாகவும், கோழிப்பண்ணை இயக்கத்தை நிறுத்த வேண்டும் எனவும், ஒருதரப்பினர் கலெக்டரிடம் தொடர்ந்து புகார் மனு அளித்துவருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், கோழிப்பண்ணைக்கு ஆதரவாக மற்றறொரு தரப்பு மக்கள், மனு அளித்தனர்.
கோழிப்பண்ணையால், துர்நாற்றமோ, ஈக்கள் தொல்லையோ, எந்த ஒரு சுகாதார சீர்கேடும் ஏற்படவில்லை. கோழிப்பண்ணை அருகே குடியிருப்புகள் இல்லை; விவசாய நிலங்கள்தான் உள்ளன. கோழி கழிவுகளை விவசாயத்துக்கு இயற்கை உரமாக பயன்படுத்தி வருகிறோம். கோழிப்பண்ணையால் பொதுமக்களாகிய எங்களுக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை என, மனு அளித்துள்ளனர்.
அதே நேரம் மற்றொருபுறம், கோழிப்பண்ணை எதிர்ப்பாளர்களும் நேற்று, மனு அளித்தனர்.