ADDED : ஏப் 08, 2025 06:08 AM

திருப்பூர் - தாராபுரம் ரோடு, ஐஸ்வர்யா நகர் பகுதி மக்கள், குடியிருப்பு பகுதியில் மனமகிழ் மன்றம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டனர்.
அம்மக்கள் கூறுகையில், ''மனமகிழ் மன்றம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே பனியன் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனை, 200 மீ., தொலைவில் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
ஏற்கனவே இங்கு டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. மன மகிழ் மன்றம் அமைந்தால், குடியிருப்பு பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள், மருத்துவமனைகளுக்கு வந்து செல்லும் நோயாளிகளுக்கு தினந்தோறும் சிரமம் ஏற்படும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரிக்கும்'' என்றனர்.
முருகம்பாளையம் அருகே, பெரியார் நகர் பகுதி மக்கள் அளித்த மனுவில், ''முருகம்பாளையம், பெரியார் நகரில், பனியன் நிறுவனத்துக்கு எதிரே உள்ள காலியிடத்தில், மனமகிழ் மன்றம் என்கிற பெயரில் மதுக்கூடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அருகாமையில், பெட்ரோல் பங்க், கருப்பராயன் கோவில், காதுகேளாதோர் பள்ளி, மாணவர்கள் பயிற்சி எடுக்கும் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளன. மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது'' என்றனர்.

