/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை இல்லை... ஈக்கள் தொல்லை... பஸ் வரலை
/
சாலை இல்லை... ஈக்கள் தொல்லை... பஸ் வரலை
ADDED : அக் 27, 2025 10:22 PM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, டி.ஆர்.ஓ. கார்த்திகேயன் ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.
இடுவாய் ஊராட்சி பொதுமக்கள்:
இடுவாய் ஊராட்சி, மாருதிநகர் 6, 7, 8 வீதிகளில், புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மூன்று வீதிகளில், 144 மீட்டர் துாரத்துக்கு, மொத்தம் 8.31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கான்கிரீட் சாலை அமைத்துள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், மூன்று வீதிகளிலும், முழுமையாக ரோடு போடப்படவில்லை; பாதி துாரம் மட்டுமே ரோடு போட்டுள்ளனர். மண் ரோட்டிலிருந்து உயரமாக உள்ள கான்கிரீட் ரோட்டில் வாகனங்கள் பயணிக்க முடிவதில்லை. பணிகள் முழுமை பெறாமல் கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தால், தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம்:
திருப்பூரிலுள்ள மின்கம்பங்களில், விதிமுறைகளை மீறி, தனியார் கேபிள், இன்டர்நெட் கேபிள்கள் கட்டப்பட்டுள்ளன. உயிர்பலி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள்களுக்கு, அதன் உரிமையாளர்களிடமிருந்து வாடகை தொகை வசூலிக்கவேண்டும்.
சின்னக்காம்பாளையம் மக்கள்:
தாராபுரம் தாலுகா, சின்னக்காம்பாளையத்தில் செயல்படும் கோழிப்பண்ணையால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பருவமழை பெய்துவரும் நிலையில், கடும் துர்நாற்றம் வீசுகிறது; ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. விதிமுறைகளை மீறி அதிக எண்ணிக்கையில் கோழி வளர்க்கின்றனர். ஆகவே, அனைத்து கோழிகளையும் அப்புறப்படுத்த வேண் டும். இல்லாவிடில், தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும்.
திருக்குமரன் நகர் பகுதி மக்கள்:
பெருந்தொழுவு, திருக்குமரன் நகரில், நுாறு குடும்பங்கள் வசிக்கிறோம். சாலை வசதி இல்லாததால், மழை நீர், ரோட்டில் தேங்குகிறது. நடந்தும், வாகனங்களிலும் செல்லமுடியாததால், குடியிருப்பு வாசிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. தேங்கும் நீரில், கொசு உற்பத்தி அதிகரித்து, டெங்கு, மலேரியா போன்ற நோய் தாக்கும் அபாயம் உள்ளது. சாலை வசதி ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.
வஞ்சிநகர் அடுக்குமாடி குடியிருப்பு மக்கள்:
வீரபாண்டி, பலவஞ்சிபாளையம், வஞ்சி நகர் அடுக்குமாடி குடியிருப்பில், 1,280 குடும்பங்கள் வசித்துவருகிறோம். கடந்த எட்டு மாதங்களாக எங்கள் பகுதி வழியாக போதிய பஸ் இயக்கப்படவில்லை. தனியார் பஸ் நடத்துனர், மக்களை மரியாதை குறைவாக பேசுகிறார்.
வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், துாய்மை பணியாளர்கள் சிரமப்படுகிறோம். எங்கள் பகுதிக்கு, போதுமான எண்ணிக்கையில் அரசு பஸ் இயக்கவேண்டும்.
நேற்றைய குறைகேட்பு கூட்டத்துக்கு, மனு அளிக்க மக்கள் வருகை குறைந்தது.
பெண் தீக்குளிக்க முயற்சி: திருப்பூர், கூத்தம்பாளையம், சோழா நகரை சேர்ந்த பிரியங்கா, 29. இவர், தனது தாய், குழந்தைகள், சகோதரிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சகோதரனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். திடீரென, பாட்டிலில் கொண்டுவந்த பெட்ரோலை உடலில் ஊற்றிய பிரியங்கா, தீக்குளிக்க முயற்சித்தார். போலீசார், பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
கலெக்டரிடம் மனு அளித்து, பிரியங்கா கூறியதாவது:
கருத்துவேறுபாடு காரணமாக, எனது கணவரிடம் இருந்து பிரிந்து, எனது மூன்று குழந்தைகள், மாற்றுத்திறனாளி தம்பி மற்றும் குடும்பத்தினருடன் வசித்துவருகிறேன். விவகாரத்து பெற்றுள்ளபோதும், அவர் என்னையும், சகோதரிகள் உள்பட குடும்பத்தினரையும் தொடர்ந்து துன்புறுத்துகிறார். வேறு வீட்டுக்கு மாறிச்சென்றாலும், தகவலறிந்து வந்து, அடிக்கிறார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும் எந்த பயனுமில்லை. எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. பெண்களை துன்புறுத்தும் நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

