/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எங்கள் சோகம் யாருக்கும் வேண்டாம்!
/
எங்கள் சோகம் யாருக்கும் வேண்டாம்!
ADDED : மார் 17, 2024 12:05 AM

பல்லடம்:தங்கள் மகனின் உயிரிழப்பை தொடர்ந்து, பல்லடத்தை சேர்ந்த பெற்றோர், பி.ஏ.பி., வாய்க்கால் முன் எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
பல்லடம் அடுத்த, செஞ்சேரிமலை பி.ஏ.பி., வாய்க்காலில் உள்ள ஆபத்தான பகுதியில் குளிக்க சென்ற பலர் நீரில் அடித்து சென்று உயிரிழந்துள்ளனர். இவ்வாறு நீரில் மூழ்கி இறந்த சிறுவன் ஒருவனின் பெற்றோர் இப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த வாய்க்கால், 10 அடி ஆழமாகவும், நீரோட்டம் இழுவை அதிகமாகவும் உள்ள பகுதி. ஆழம் தெரியாமல் குதித்து பலியானவர்கள் ஏராளமானோர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வெளியூர் நபர்கள் இந்த ஆபத்தான நீரில் இறங்க வேண்டாம். கடந்த ஆண்டு மார்ச் 9ம் தேதி எங்கள் மகன் அஜீஸ், 17, நண்பர்களோடு குளிக்கும் போது, நீரில் மூழ்கி இதே இடத்தில் உயிரிழந்தார்.
இரண்டு நாட்கள் கழித்து அவரது உடல் கிடைத்தது. இப்போது அவனைப் பிரிந்து நாங்கள் மீளா துயரில் தவித்து வருகிறோம். 'பொதுநலன் கருதி, கண்ணீரோடு அஜீஸ் பெற்றோர்கள், பல்லடம்' என, இந்த எச்சரிக்கை பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த இடத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழப்புகளை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்குமாறு கூறியும் அதிகாரிகள் யாரும் செவி சாய்க்காததால், அஜீஸ் பெற்றோர்கள் தங்களது சொந்த செலவில் இந்த எச்சரிக்கை பலகையை வைத்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.
தங்கள் மகனுக்கு நேர்ந்த சோகம் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்ற சமூக நலனுடன் பெற்றோர்கள் எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

