/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேட்புமனு தாக்கல்! நாளை முதல் துவங்குகிறது... விதிகளை கடைப்பிடிக்க உத்தரவு
/
வேட்புமனு தாக்கல்! நாளை முதல் துவங்குகிறது... விதிகளை கடைப்பிடிக்க உத்தரவு
வேட்புமனு தாக்கல்! நாளை முதல் துவங்குகிறது... விதிகளை கடைப்பிடிக்க உத்தரவு
வேட்புமனு தாக்கல்! நாளை முதல் துவங்குகிறது... விதிகளை கடைப்பிடிக்க உத்தரவு
ADDED : மார் 19, 2024 12:00 AM

திருப்பூர்;லோக்சபா தேர்தலில் வேட்புமனு தாக்கல் நாளை துவங்குகிறது; ஒரு வேட்பாளருடன் நான்குபேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில்,நேற்று நடந்த லோக்சபா தேர்தல் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 23 லட்சத்து 44,810 வாக்காளர் உள்ளனர்.
தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி, 1500 க்கு மேல் வாக்காளர் உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, 20 துணை ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மொத்த ஓட்டுச்சாவடி எண்ணிக்கை, 2540 ஆக உயர்ந்துள்ளது.
வரும் ஏப்., 19 ம் தேதி ஓட்டுப்பதிவு நாளில், அரசு அலுவலர்கள் 12,589 பேர்; 4500 போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாவட்டத்தில் மிக பதட்டமான ஓட்டுச்சாவடிகள் ஏதுமில்லை.
தாராபுரத்தில் 25; காங்கயத்தில் 37; அவிநாசியில் 25; திருப்பூர் வடக்கில் 95; திருப்பூர் தெற்கு தொகுதியில் 75; பல்லடத்தில் 40; உடுமலையில் 14; மடத்துக்குளத்தில் 7 என, மொத்தம் 318 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
வீடியோ கண்காணிப்பு
தேர்தல் நடத்தை விதி மீறல்களை தடுப்பதற்காக, தொகுதிக்கு மூன்று வீதம், 24 பறக்கும்படை; 24 நிலை கண்காணிப்புக் குழுக்கள்; தொகுதிக்கு 2 வீதம் 16 வீடியோ கண்காணிப்புக்குழு என மொத்தம் 64 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு வாகனங்களின் மேற்பகுதியில் சுழல் கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு, கன்ட்ரோல் ரூமிலிருந்து, வாகனங்களில் நகர்வுகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.
பொதுமக்கள், 1800 425 6989 என்கிற டோல்ப்ரீ எண்ணில் தொடர்பு கொண்டும், சி - விஜில் செயலி வாயிலாகவும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்கலாம். வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, 1950 என்கிற எண்ணை தொடர்புகொள்ளலாம். மக்கள் அளிக்கும் புகார்கள் மீது, 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தனிநபர் கட்டடங்களில் உள்ள அரசியல் விளம்பரம், சுவர் விளம்பரம், கட்சிக் கொடிகள், 72 மணி நேரத்துக்குள் அகற்றப்பட வேண்டும். வேட்புமனு தாக்கல், வரும் 20ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடைபெறுகிறது. கலெக்டர் அலுவலகத்தில், வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளருடன், நான்குபேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
டி.ஆர்.ஓ., ஜெய்பீம், சப்கலெக்டர் சவுமியா, போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

