/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முடியாது என்பது எதுவும் இல்லை முயற்சித்தால் வெற்றி துாரமும் இல்லை
/
முடியாது என்பது எதுவும் இல்லை முயற்சித்தால் வெற்றி துாரமும் இல்லை
முடியாது என்பது எதுவும் இல்லை முயற்சித்தால் வெற்றி துாரமும் இல்லை
முடியாது என்பது எதுவும் இல்லை முயற்சித்தால் வெற்றி துாரமும் இல்லை
ADDED : ஏப் 26, 2025 11:38 PM

உடல் சார்ந்த குறையுள்ளவர்களுக்கு சாதனை என்பது, எட்டாக்கனி தான் என்ற எண்ணம் தான், சமுதாயத்தில் மேலோங்கியிருக்கிறது.
இருப்பினும், அவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை விதை விதைத்து, பயிற்சி எனும் நீர் ஊற்றும் போது, சாதனை என்ற வளர்ச்சியில் தழைத்து நிற்கும் இயலா குழந்தைகள் ஏராளமாக உள்ளனர்.
அந்த வரிசையில், திருப்பூர் சாய் கிருபா சிறப்பு பள்ளியில் பயின்று வரும் மாணவன் வசந்தகுமார், 19. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட நிலையிலும், டேபிள் டென்னிஸ் போட்டியில் அசாத்திய சாதனை படைக்க தயாராகி வருகிறார்.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென, ஸ்பெஷல் ஒலிம்பிக் பாரத் என்ற பெயரில் தேசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தகுதி சுற்றுபோட்டியில், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், வசந்தகுமார், பங்கேற்க இருக்கிறார்.
மாநில அளவில் நடந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதன் விளைவாக, தேசிய போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்.
நல்ல பலன் கிடைக்கிறது
சாய் கிருபா சிறப்பு பள்ளி நிறுவனர் கவின் திருமுருகன் கூறியதாவது:
ஆட்டிசம் குழந்தைகளுக்கு, விளையாட்டுப் பயிற்சி என்பது, அவர்களை ஆற்றுப்படுத்தும். அது மட்டுமின்றி, அறிவுசார் திறமையை அது மேம்படுத்தும்.
எங்கள் பள்ளி மாணவன் வசந்தகுமார், கடந்த ஏழாண்டாக, டேபிள் டென்னிஸ் பயிற்சி பெற்று வருகிறார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். வரும், 2027ல், ஆட்டிசம் குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டி நடக்க இருக்கிறது.
அதில், பங்கேற்க தகுதி பெறுவதற்கான தேசிய அளவிலான தேர்வு போட்டியில் தான் வசந்தகுமார் பங்கேற்க உள்ளார். டேபிள் டென்னிஸ் மட்டுமின்றி, பவர் லிப்டிங், ேஹண்ட்பால், கால்பந்து உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கி வருகிறோம்.
ஆட்டிசம் குழந்தைகளையும் சமூகத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் தான், இதுபோன்ற பயிற்சியை அவர்களுக்கு வழங்கி வருகிறோம்; நல்ல பலன் கிடைக்கிறது.