/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனுமதி பெறாத வீடுகளுக்கு நோட்டீஸ்
/
அனுமதி பெறாத வீடுகளுக்கு நோட்டீஸ்
ADDED : நவ 12, 2024 06:12 AM
திருப்பூர்; கட்டட வரைபட அனுமதி பெறாத வீடுகளுக்கு வெள்ளியம்பதி ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்துக்குளி ஒன்றியம், வெள்ளியம்பதியை சேர்ந்த மணிகண்டன், தனது தாயார் அருள்மொழியுடன் வந்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
வெள்ளியம்பதியில் நுாறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக, மாவட்ட குறைதீர்க்கும் அதிகாரிக்கு புகார் மனு அனுப்பினோம். விசாரணை நடத்திய அதிகாரிகள், பணிகள் நடைபெறாமலேயே பணம் எடுக்கப்பட்டதை உறுதி செய்தனர்.
இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, வெள்ளியம்பதி ஊராட்சி தலைவர், எனது தாயாருக்கு சொந்தமான கதவு எண் 1/506ல், பத்து ஆண்டுகளாக குடியிருந்துவரும் வீட்டை, அனுமதி பெறாமல் கட்டியதாக கூறி, இடிப்பதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
எனக்கு பசுமை வீடு வழங்கல் திட்டம் மூலம் வீடு வழங்கப்பட்டது. போதிய இட வசதி இல்லாததால், வீட்டை விரிவுபடுத்த முடிவு செய்தேன். ஊராட்சி செயலரிடம் இது தொடர்பாக கடிதம் அளித்தோம். அவர் வாய்மொழியாக, வீடு விரிவாக்கம் செய்ய அனுமதி அளித்தார். ஊராட்சிக்கு உரிய வரியை தவறாமல் செலுத்திவருகிறோம்; எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை.
பழிவாங்கும் நடவடிக்கையாக எனது தாயாருக்கு சொந்தமான வீட்டை இடித்து அகற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும். வீட்டை இடிக்க நோட்டீஸ் அனுப்பிய ஊராட்சி தலைவர் கொண்டசாமி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். எனது தாயாருக்கும், வீட்டுக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும்.
இவ்வாறு, அம்மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஊராட்சி செயலர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, 'நுாறு நாள் வேலை திட்ட விவகாரத்துக்கும், அனுமதி பெறாத வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
வெள்ளியம்பதியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வீடுகளுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நபருக்கு மட்டுமல்ல, இதுவரை மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்; மேலும் ஐந்து வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. நோட்டீஸை பார்த்து பயப்பட தேவையில்லை; ஆன்லைனில் விண்ணப்பித்து, கட்டட அனுமதி பெற்றுக்கொள்ளலாம்' என்றார்.