/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இனி, இருக்கும் வாழ்க்கைஇனிப்பாக இருக்கட்டும்
/
இனி, இருக்கும் வாழ்க்கைஇனிப்பாக இருக்கட்டும்
ADDED : செப் 08, 2024 10:57 PM
இனி, இருக்கும் வாழ்க்கை இனிப்பாக இருக்கட்டும்
நான் சரோகுமாரி; பி.எஸ்.சி., பி.எட்., படிப்பு முடித்து, ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது, உடன் பணியாற்றியவர் ஒருவரைக் காதலித்தேன். இருவீட்டாரிடம் சொல்லி, திருமணம் செய்துவைக்க அணுகியபோது, என்னை விரும்பியவர், வெறுத்து ஒதுக்கினார். கர்ப்பமாக இருந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்து விட, வீட்டை விட்டு விரட்டியடித்தனர்; கருவை சட்டப்படி கலைத்து விட்டு, நிர்க்கதியாய் உணர்ந்தேன்..
திருப்பூரில் வந்து தனியே தங்கி பணியாற்றிய போது, என் நினைவலைகள் மீண்டும் குற்ற உணர்ச்சியைத் தாங்கி நின்றன. பணியாற்றும் நிறுவனத்திலேயே தற்கொலைக்கு முயன்றேன். அரசு மருத்துவமனையில் செயல்படும் மையத்துக்கு தகவல் தெரிவித்து, என்னை மீட்டு வந்தனர். எனக்கு கவுன்சிலிங் வழங்கினர். நடந்ததை எல்லாம் இப்படியே நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி வாழ முடியும்?
தொடர்ச்சியாக கவுன்சிலிங் கொடுத்தனர். தற்கொலை எண்ணத்தில் இருந்து ஒரு தெளிவு பெற்ற பின், கோவையில் உள்ள 'பிரபஞ்சம்' உதவி மையம் மூலம், எனக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து கொடுத்தனர். கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில், தற்போது பணியாற்றி வருகிறேன்.
வாழ்வில் நிதானித்து சிந்திக்க தவறியதால் ஏற்பட்ட பின் விளைவுகளை அசை போட்டால், நம்மால் ஓரடி கூட எடுத்து வைக்க முடியாது. இருக்கும் காலத்தில் இனி இனிப்பாக வாழத் தலைப்படுகிறேன்.
தனது அனுபவத்தைப் பகிர்ந்தவர்: சரோகுமாரி