/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் கரையோர ரோடுகள் கைகொடுத்தன
/
நொய்யல் கரையோர ரோடுகள் கைகொடுத்தன
ADDED : மே 29, 2025 12:49 AM
திருப்பூர், ; நொய்யல் வெள்ளப்பெருக்கில் அணைப்பாளையம் பாலம் மூழ்கியதால், அவ்வழியாக சென்று வருவோருக்கு, கரையோர ரோடு பயனுள்ளதாக இருப்பதாக, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் தொழில் அமைப்புகள் முயற்சியால், நொய்யல் கரையோரம் புதிய பாதை அமைக்கப்பட்டது; ஒவ்வொரு தொழில் அமைப்புகள் மற்றும் பொதுநல அமைப்புகள் மூலம், தார்ரோடு அமைக்கப்பட்டது.
ரோடுகள் புதுப்பிப்பு
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், நொய்யல் ஆற்றை சீரமைத்து, கரையோர ரோடுகள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
குறிப்பாக, நொய்யல் கரையோரம் அமைத்துள்ள புதிய ரோடால், நகரின் முக்கிய ரோடுகளில் நெரிசல் குறைந்துள்ளதாக, வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக, நொய்யலில் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது; அணைப்பாளையம் ரோட்டை, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
வேலம்பாளையம், அவிநாசி ரோடு, காலேஜ்ரோடு, மங்கலம் ரோடு பகுதிகளை இணைக்கும் அந்த ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது.
வாகனங்களுக்கு எளிது
நேற்று காலை, அணைப்பாளையம் வெள்ளப்பெருக்கால் மூழ்கியது; போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அவசரமாக செல்ல வேண்டிய வாகனங்கள், ஆற்றின் இருபுறமும் உள்ள கரையோர ரோடுகளை பயன்படுத்தி, எளிதாக சென்றுவிட்டன. ரோடு அமைத்து பல மாதங்களாகியும், பயன்பாடு குறைவாக இருந்தது.
மின் விளக்குகள் இல்லை
ஒரு நாள் மழைக்கே, பாலம் தாக்குபிடிக்காததால், டூ வீலர் மற்றும் கார்கள் என, அனைத்து வாகனங்களும், நொய்யல் கரையோர ரோட்டை பயன்படுத்தி வருகின்றன. புதிய நொய்யல் ரோடுகளில், கம்பம் நடப்பட்டுள்ளது; விரைவாக, தெருவிளக்கு பொருத்த வேண்டும்.
நொய்யல் ரோட்டோரமாக கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். விரைவாக, வளர்மதி பாலம் வரை, கரையோர ரோட்டை இணைக்க வேண்டும். அதன் மூலம், திருப்பூர் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என, பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.