/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசமே... எங்கள் சுவாசமே! பட்டொளி வீசி பறந்த தாயின் மணிக்கொடி; களைகட்டிய வண்ணமய கலைநிகழ்ச்சிகள்
/
தேசமே... எங்கள் சுவாசமே! பட்டொளி வீசி பறந்த தாயின் மணிக்கொடி; களைகட்டிய வண்ணமய கலைநிகழ்ச்சிகள்
தேசமே... எங்கள் சுவாசமே! பட்டொளி வீசி பறந்த தாயின் மணிக்கொடி; களைகட்டிய வண்ணமய கலைநிகழ்ச்சிகள்
தேசமே... எங்கள் சுவாசமே! பட்டொளி வீசி பறந்த தாயின் மணிக்கொடி; களைகட்டிய வண்ணமய கலைநிகழ்ச்சிகள்
ADDED : ஆக 16, 2025 12:19 AM

திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த சுதந்திர தின விழா, போலீசாரின் மிடுக்கான அணிவகுப்பு, பள்ளி மாணவ, மாணவியரின் அசத்தலான கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது.
மாவட்ட வருவாய்த்துறை சார்பில், 79வது சுதந்திர தின விழா, சிக்கண்ணா கல்லுாரி அருகேயுள்ள விளையாட்டு ஆணைய மைதானத்தில் நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை, 9:05 மணிக்கு, கலெக்டர், மனீஷ் நாரணவரே தேசியக்கொடியேற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவுடன், திறந்தவெளி வாகனத்தில் சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார்.போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர்கள் தீபா சத்யன், பிரவீன் கவுதம், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அணிவகுப்பு குழு தலைவர் மகேந்திரன், கலெக்டரிடம் அனுமதி பெற்று, அணிவகுப்பை துவக்கினார். ரஞ்சித்குமார் தலைமையிலான ஊர்க்காவல் படை 'பேண்டு' வாத்திய குழு முன்னே செல்ல, படைப்பிரிவினர் மிடுக்காக அணிவகுத்து சென்றனர்.
சிறப்பு ஆயுதப்படையின், ரஞ்சித்குமார், கவிப்பிரியா, குகன் ஆகியோர் தலைமையிலான படைப்பிரிவினர்; கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள், வாசுதேவன் தலைமையிலான போக்குவரத்து போலீசார், சுபாஷ் தலைமையிலான தேசிய மாணவர் படை வீரர்கள், மிடுக்காக அணிவகுத்தனர். சமாதானத்தை வலியுறுத்தி, கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோர் வெள்ளை சமாதான புறாக்கள் பறக்கவிட்டனர். நாட்டுப்பற்றை பறைசாற்றும் வகையில், காவி, வெள்ளை, பச்சை மற்றும் ஊதா நிற, வண்ண பலுான்கள் வானில் பறக்கவிடப்பட்டன.
தியாகிகள் கவுரவிப்பு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தை சேர்ந்த, 41 பேர், பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். கலெக்டர் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினார். மாநகர போலீசை சேர்ந்த, 34 பேர்; மாவட்ட போலீஸ் பிரிவை சேர்ந்த 20 பேர்; தீயணைப்புத்துறையில் 10; என, 64 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுமதி, பல்லடம் தாசில்தார் சபரி உட்பட அரசுத்துறையினர், சுகாதாரத்துறையினர் என, 149 பேருக்கு, சிறப்பாக பணியாற்றியதற்காக நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், 'தாட்கோ' திட்டம், தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகம், தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, வேளாண் பொறியியல் துறை, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 64 பயனாளிகளுக்கு, 86.98 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
கண்கவர் கலை நிகழ்ச்சி சுதந்திர தினவிழாவை மெருகூட்டும் வகையில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற, தேசப்பற்றை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
எஸ்.கே.எல்., மெட்ரிக் பப்ளிக் பள்ளி, குமார் நகர் மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, அங்கேரிபாளையம் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி, அவிநாசி செயின்ட் தாமஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் செயின்ட் அலோசியஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அய்யங்காளிபாளையம் வி.கே., அரசு மேல்நிலைப்பள்ளி என, மொத்தம் 764 பள்ளி, மாணவ மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் களைகட்டின. 'எங்களுக்கும் காலம் வரும்... ஜீவநதி நொய்யலையும் காத்திடுவோமே,' என்று பாடல் மெட்டு அமைத்து, நடனமாடிய கொங்கு வேளாளர் பள்ளி மாணவ, மாணவியரின் நடனம், அதிகளவில் பாராட்டை பெற்றது.
செந்தமிழுக்கு மரியாதை வீரபாண்டி அரசு பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி, அய்யங்காளிபாளையம் பள்ளி ஆசிரியர் சண்முகசுந்தரம், ஜெய்வாபாய் பள்ளி ஆசிரியர் அஞ்சுகவதி ஆகியோர், தேன் தமிழ்ச்சொற்களால் அலங்கரிக்கும் வகையில், விழாவை சிறப்பாக தொகுத்து வழங்கினர். விழா துவக்கம் மற்றும் நிறைவின் போது, 'பேண்டு' வாத்திய குழுவால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
16 ஆண்டு வரலாறு மாறியது திருப்பூர் மாவட்டம் உதயமான பின், 2009ல் முதன் முதலாக, சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது; தொடர்ந்து, கடந்த, 16 ஆண்டுகளாக, குடியரசு தினவிழா, சுதந்திர தின விழா அதே மைதானத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. முதன்முறையாக நேற்று, அருகே புதிதாக அமைந்துள்ள, மாவட்ட விளையாட்டு ஆணையத்தின், திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது குறிப்பிடதக்கது.
மரம் வளர்ப்பு விழிப்புணர்வு திருப்பூரை சேர்ந்த அய்யப்பன் என்பவர், பச்சை நிற ஆடை அணிந்து, ஆடையில் உள்ள பைகளில், மரக்கன்றுகளுடன் உலாவந்து, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்; 'மீண்டும் மஞ்சப்பை' குறித்தும் விழிப்புணர்வு செய்தார். அதேபோல், தேசிய கொடியுடன் ஒருவரும், காந்தியடிகள் போல் வேடமிட்ட சந்திரன் என்பவரும், மைதானத்தை வலம் வந்து, தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.