/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்ட இடம் தேடியலையும் அதிகாரிகள்
/
குப்பை கொட்ட இடம் தேடியலையும் அதிகாரிகள்
ADDED : அக் 18, 2024 06:45 AM

அனுப்பர்பாளையம் : திருப்பூரில் இருந்து தினசரி, 600 முதல் 700 டன் வரை குப்பை சேகர மாகிறது. குப்பைகளை கொட்ட மாநகராட்சிக்கென தனி இடம் இல்லை. இதனால், மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டி வருகின்றனர்.
குப்பை கொட்டப் படுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை, சுகாதாரச் சீர்கேடால் பொதுமக்கள் குப்பை கொட்ட தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியல், போராட்டம் உள்ளிட்டவை நடத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது. போயம்பாளையம் பகுதியில் குப்பை கொட்டி வந்த பாறை குழி நிறைந்து விட்டது. குப்பை கொட்ட இடம் இல்லாததால், கடந்த ஒரு வாரமாக குப்பை எடுப்பது தடைபட்டது. அதிகாரிகள் முதலிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பாறைக்குழியை குப்பை கொட்ட தேர்ந்தெடுத்தனர். அதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த ஒரு வாரமாக குப்பை எடுக்கப்படாமல் இருந்ததால் ஆங்காங்கே குப்பைகள் மலைபோல், தேங்கி உள்ளது. தற்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால், குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது: தேங்கி உள்ள குப்பைகளை எடுக்கும் பணியை வேகப்படுத்த வேண்டும். அதிக வருவாய் உள்ள மாநகராட்சி ஒவ்வொறு தடவையும் குப்பை கொட்ட இடமின்றி குப்பை தேங்குவது வாடிக்கையாக உள்ளது. குப்பை கொட்டுவதிற்கென நிரந்தர தனி இடம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் இருந்து மின்சாரம் தயாரித்தல் உள்ளிட்ட பயனுள்ள பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.