/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களை மிரட்டி லஞ்சம் வசூலிக்கும் அதிகாரிகள்! நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
/
மக்களை மிரட்டி லஞ்சம் வசூலிக்கும் அதிகாரிகள்! நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
மக்களை மிரட்டி லஞ்சம் வசூலிக்கும் அதிகாரிகள்! நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
மக்களை மிரட்டி லஞ்சம் வசூலிக்கும் அதிகாரிகள்! நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
ADDED : ஆக 20, 2025 09:20 PM
உடுமலை; உடுமலை நகராட்சியில் மேற்கொள்ளப்படும் ரோடு, மழை நீர் வடிகால் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் தரமற்றதாக மேற்கொள்வதாகவும், புதிய வரி விதிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு அதிகாரிகள் மிரட்டி பணம் வசூலிப்பதாகவும், கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலை நகராட்சி கூட்டம், தலைவர் மத்தீன் தலைமையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
உடுமலை நகராட்சி பகுதிகளில், 3 புதிய ரோடுகள் அமைத்தல் உட்பட 74 ரோடுகள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. ரோடுகள் தரமில்லாமல், பெயரளவிற்கு அமைக்கப்படுகிறது.
தரமற்ற ரோடு பழைய ரோடு, 3 செ.மீ., ரோடு தோண்டப்பட்டு, அதற்கு பின் ரோடு அமைக்க வேண்டும். ஆனால், எந்த ரோடுகளும் விதிமுறைப்படி அமைக்கப்படுவதில்லை. புதிதாக அமைக்கப்பட்ட ரோட்டில் பைக் நிறுத்தினாலே, ரோடு சேதமடைந்து வருகிறது.
அதிகாரிகள் ஆய்வு செய்து, திட்ட வடிவமைப்பு அடிப்படையில் மேற்கொள்வதையும், கொடுக்கப்பட்ட கட்டுமான பொருட்களை பயன்படுத்துவதையும் உறுதி செய்வதில்லை.
எனவே, ரோடு அமைக்க டெண்டர் எடுத்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறுத்தி வைக்கவும், அந்நிறுவனங்கள் செய்த பணிகளை ஆய்வு அதற்கு பின், நிதி விடுவிக்கப்பட வேண்டும்.
அதே போல் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியின் போது, உரிய அளவீடுகளில் அமைக்காமல், கட்டுமான பொருட்கள் தரமற்றதாகவும் பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட் 'கியூரிங்' செய்யாமல், பெயரளவிற்கு பணி மேற்கொள்ளப்படுகிது.
பாதாளச்சாக்கடை திட்டத்திற்கு, ரோடுகளில் அமைக்கப்பட்டுள்ள மேனுவல் உயரமாகவும்,, குழியாகவும், பல இடங்களில் உடைந்தும் காணப்படுகிறது. இதற்கு தனியாக நிதி ஒதுக்கியும், தரமற்ற பணி காரணமாக வீணாகியுள்ளது.
இருக்கை இல்லை தற்போது திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டில், பயணியர் அமர இருக்கை, நிழற்கூரை வசதிகள் இல்லை.
பஸ் ஸ்டாண்டிலிருந்து, கூடுதல் பஸ் ஸ்டாண்டிற்கு பயணிகள் பிரதான ரோட்டை கடக்க வேண்டியுள்ளதால், போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுகிறது. பயணிகள் ரோட்டை கடக்க சுரங்க பாலம் உள்ளிட்ட பணி மேற்கொள்ள வேண்டும். உடனடியாக வாகனங்களின் வேகத்தை குறைக்க, வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
கணக்கு பிரிவில், நகராட்சியில் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு, பில் தொகை விடுவிக்க மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்படுவதாகவும், 'தொகையை' எதிர்பார்த்து அதிகாரிகள் வேலை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதே நிலை நீடித்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பெயர்கள் நகராட்சி கூட்டத்திலேயே வெளியிடப்படும். பாதாளச்சாக்கடை இணைப்பு வழங்காதவர்களுக்கும், தொகை வசூலிக்கப்படுகிறது.
குடிசை பகுதிகளில் கூட, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வரிவசூல் மையத்தில், வரி செலுத்த வரும் பொதுமக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். பெயர், முகவரி மாறி என பல குளறுபடிகள் உள்ளன. எழுதி விண்ணப்பம் அளித்தும், பல ஆண்டுகளாக திருத்தாமல் உள்ளனர்.
புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவது ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்பட்டாமலும், முறைகேடாக தொகை வசூலிக்கப்படுகிறது. அனுமதி வழங்கப்பட்ட அளவிற்குத்தான் கட்டடம் கட்டப்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்யாமல், பணி நிறைவு சான்று வழங்குகின்றனர்.
பக்க திறவிடம், பார்க்கிங், ரோட்டிலிருந்து கட்டடம் உள்ளே அமைக்க வேண்டும், என்ற எந்த விதிமுறையும் பின்பற்றாமல் கட்டப்படுவதால், ரோடுகளில் நெரிசல் ஏற்படுகிறது.
நகராட்சியில் புதிய வரி விதிப்பு, வரி மறு சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு செல்லும் வருவாய் பிரிவு அதிகாரிகள், விதிப்படி, 40 ஆயிரம் வரி விதிக்க வேண்டிய கட்டடத்திற்கு, 4 லட்சம் விதிக்கப்படும்; எங்களுக்கு, 2 லட்சம் தந்தால் போதும்; குறைவாக வரி நிர்ணயித்து தருகிறோம் என மிரட்டி வசூல் செய்து வருகின்றனர்.
கட்டட அனுமதிக்கும் அதிகளவு தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. சம்பளம் வாங்குகிறீர்களே; எதற்கு லஞ்சம் கேட்கிறீர்கள்; அதிகாரிகள் திருத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினர்.
இக்கூட்டத்தில், 192 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், தரமற்ற ரோடு பணி மேற்கொண்ட நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும் 3 தீர்மானங்களை தவிர, மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.