ADDED : டிச 09, 2024 04:49 AM
திருப்பூர் : கடந்த இரு மாதங்களோடு ஒப்பிடுகையில், நடப்பு மாதத் துவக்கத்திலேயே எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மாதாந்திர வீட்டு பட்ஜெட்டில் எண்ணெய்க்கு கூடுதல் செலவாகிறது.
இதுவரை இல்லாத வகையில், லிட்டருக்கு, 15 முதல், 45 ரூபாய் வரை விலை கூடியுள்ளது. பாமாயில் மட்டுமே வாங்கி பயன்படுத்தி வரும் நடுத்தர குடும்பத்தினர் கூட விலை உயர்வால் புலம்புகின்றனர். திருப்பூரில் செப்., மாதம் பாமாயில், லிட்டர் 105 ரூபாய்க்கு விற்றது; தற்போது, 142 ரூபாயாக உள்ளது. சூரியகாந்தி எண்ணெய், 118 ரூபாயாக இருந்தது; தற்போது, 150 ரூபாய். தரமான கடலை எண்ணெய், 195 ரூபாயாக உள்ளது. இதற்கு முன், 177 ரூபாய்க்கு விற்றது. தரமான நல்லெண்ணெய், 300 ரூபாயாக இருந்தது; 335 ரூபாய்க்கு விற்கிறது.
கச்சா, பாமாயில், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி, 5.5ல் இருந்து, 27.5 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி, 13.75 சதவீதத்தில் இருந்து, 33.75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை இறக்குமதி வரியை திடீரென, 20 சதவீதம் அதிகரித்ததே எண்ணெய் ரகங்களின் இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் வியாபாரிகள்.