/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி.. விளைநிலங்களில் 'மாயம்'! கண்டுகொள்ளாத அரசால் கவலை
/
எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி.. விளைநிலங்களில் 'மாயம்'! கண்டுகொள்ளாத அரசால் கவலை
எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி.. விளைநிலங்களில் 'மாயம்'! கண்டுகொள்ளாத அரசால் கவலை
எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி.. விளைநிலங்களில் 'மாயம்'! கண்டுகொள்ளாத அரசால் கவலை
ADDED : ஜூலை 06, 2025 10:55 PM

உடுமலை; எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, சூரியகாந்தி சாகுபடியை ஊக்குவிக்க தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால், உடுமலை உள்ளிட்ட வட்டாரங்களில் அச்சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து விட்டது.
உடுமலை வட்டாரத்தில், தேவனுார்புதுார், ஆண்டியூர், எரிசனம்பட்டி, செல்லப்பம்பாளையம், உடுக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நிலக்கடலை முன்பு பிரதான சாகுபடியாக இருந்தது.
மேலும், ராகல்பாவி, கணபதிபாளையம், வேலுார் சுற்றுப்பகுதிகளில், பி.ஏ.பி., பாசனத்துக்கு சூரியகாந்தி அதிகளவு சாகுபடியானது.
எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடிக்கு முன்பு, பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. மேலும், இறக்குமதியை குறைக்க, இவ்வகை சாகுபடிகள் அரசால் ஊக்குவிக்கப்பட்டது.
விவசாயிகள் நலனுக்காக, மத்திய அரசு சூரியகாந்திக்கான ஆதார விலையையும், சில ஆண்டுகளுக்கு முன் உயர்த்தியது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடியில் நிலவும் சவால்களால், அச்சாகுபடியை விவசாயிகள் கைவிட்டுள்ளனர். அவ்வகையில், பிரதானமாக இருந்த சூரியகாந்தி சாகுபடி பார்ப்பதே அரிதாகி விட்டது.
இந்தாண்டு, நீண்ட இடைவெளிக்குப்பிறகு, ராகல்பாவி சுற்றுப்பகுதிகளில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டது.
விதைகள் கிடைப்பதில்லை
விவசாயி சிவக்குமார் கூறியதாவது: எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி செய்ய மிகவும் சிரமப்படுகிறோம். சூரியகாந்தி விதைகள் கூட கிடைப்பதில்லை. விருதுநகர் பகுதியிலிருந்து தனியார் நிறுவனத்தினர் விதைகளை பெற்றுத்தந்தனர்.
ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது; 900 கிலோ விளைச்சல் கிடைத்துள்ளது. கிலோ, 52 ரூபாய் வரை கொள்முதல் செய்தனர்.
வழக்கமாக ஏக்கருக்கு, 1,200 கிலோ வரை விளைச்சல் இருக்கும். இந்தாண்டு வாடல் நோய் தாக்கியதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முன்பு, சூரியகாந்தி செடிகளில், அயல் மகரந்த சேர்க்கைக்காக, தேனீ பெட்டிகள் அரசால் மானியத்தில் வழங்கப்பட்டது; தற்போது எவ்வித மானிய திட்டமும், சூரியகாந்தி சாகுபடிக்கு இல்லை.
பறவைகளாலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. சீசன் சமயங்களில், எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடிக்கான விதை, இடுபொருட்கள் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.
மானிய திட்டங்கள் தேவை
இதே போல், நிலக்கடலை சாகுபடி பரப்பும் குறைந்து கொண்டே வருகிறது. காட்டுப்பன்றிகளால் சேதம்; புதிய ரக விதைகள் கிடைக்காதது உள்ளிட்டவையே நிலக்கடலை சாகுபடியை கைவிடுவதற்கான காரணங்களாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மீண்டும் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வகையில், தமிழக அரசு மானியத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வகை சாகுபடியைஅனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ள முடியாது; உடுமலை பகுதியில் உள்ள மண் வளம் மற்றும் சீதோஷ்ணம் காரணமாக, எண்ணெய் வித்து பயிர்களில் நல்ல விளைச்சலை பெற முடியும்.
மேலும், அருகிலுள்ள காங்கயத்தில், எண்ணெய் உற்பத்தி ஆலைகள் அதிகளவு உள்ளதால், உள்ளூர் எண்ணெய் தயாரிப்பு அதிகரிக்கும்; விவசாயிகள், மக்கள் என இரு தரப்பினரும் பயன்பெறுவார்கள்.

