/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழைமானி நிறுவுவது எந்த அடிப்படையில்?
/
மழைமானி நிறுவுவது எந்த அடிப்படையில்?
ADDED : மார் 03, 2024 11:43 PM
பல்லடம்;திருப்பூர் மாவட்டத்தில், 49 இடங்களில் தானியங்கி மழைமானி அமைக்கப்படவுள்ளது. ''மழைமானி நிறுவுவது எந்த அடிப்படையில்'' என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
''பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் 49 தானியங்கி மழைமானிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் பொது நிதியில் இருந்து கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை ஏற்படுத்த வேண்டும்'' என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் வடக்கு - தெற்கு - 3, அவிநாசி 5, பல்லடம் 7, ஊத்துக்குளி 1, தாராபுரம் 12, காங்கயம் 10, உடுமலை 8, மடத்துக்குளம் 3 என, மொத்தம், 49 இடங்களில் மழைமானிகள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில், 35 மழைமானிகள் நிலத்திலும், மீதமுள்ள, 14 மானிகள் கட்டடங்களின் மேற்பகுதிகளிலும் அமைக்கப்பட உள்ளன.
பல்லடம் பகுதி விவசாயிகள் கூறுகையில், 'வானிலை குறித்து தெரிந்து கொண்டு அதற்கேற்ற பயிர் சாகுபடியில் ஈடுபட தானியங்கி மழைமானி அமைக்க வேண்டியது மிக அவசியம். ஆனால், மழைமானி அமைப்பதற்கான சர்வே எவ்வாறு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. குறிப்பாக, பல்லடம் தாலுகாவில் உள்ள எலவந்தி ஊராட்சியில் மூன்று இடங்களில் மழைமானி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்னை விவசாயம் பரவலாக நடந்து வரும் சூழலில், எதன் அடிப்படையில் மழைமானி அமைக்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் விளக்க வேண்டும்.
கூடுதல் ஆய்வு செய்து, விவசாயிகள் பயன்பெறும் வகையில், தேவையான இடங்களில் மழைமானி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

