/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவியரின் 'பூக்களம்'; களை கட்டிய ஓணம்
/
மாணவியரின் 'பூக்களம்'; களை கட்டிய ஓணம்
ADDED : செப் 03, 2025 11:44 PM

திருப்பூர்; திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் மாணவிகள் கொண்டாடிய ஓணம் பண்டிகை, கேரள கலாசாரம், பண்பாட்டை கண்முன் கொண்டு வந்தது.
வரும், 5ம் தேதி மலையாள மக்களின் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையை திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி மாணவியர், நேற்று கொண்டாடினர். கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். மாணவியர் அனைவரும், ஓணம் விழாவின் போது, மலையாள பெண்கள் உடுத்தும் சேலையணிந்து உற்சாகமாக பங்கேற்றனர். கல்லுாரி வளாகத்தில் 'பூக்களம்' என்ற மலர்க்கோலமிட்டு அசத்தினர்.
அதன்பின், 'திருவாதிரை களி' எனும் நடனமாடி மகிழ்ந்தனர். கேரள செண்டை மேளம் இசைத்து, மகிழ்வித்தனர். ஓணம் பண்டிகையின் வரலாற்றை விளக்கும் மகாபலி சக்ரவர்த்தியின் வரலாறு, வாமன அவதாரத்தின் சிறப்பு ஆகியவற்றை, மாணவி கார்த்திகா விளக்கினார். கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர். கல்லுாரி பேரவை பொறுப்பாளர் சுதாதேவி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.