/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயிலில் செல்வது ஒருவர்... வழியனுப்ப வருவதோ ஐவர்
/
ரயிலில் செல்வது ஒருவர்... வழியனுப்ப வருவதோ ஐவர்
ADDED : டிச 21, 2025 05:53 AM
திருப்பூரில் இருந்து ரயிலில் வெளிமாநிலத்தவர் தான் அதிகளவில் பயணிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு மொத்த பயணிகள் எண்ணிக்கை, 6,500 என்றால், அதில், 4,000 பேர் வடமாநிலத்தவர். வந்திறங்குபவர்களே அதிகம் என்றாலும், ஆயிரக்கணக்கானோர் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டும் செல்கின்றனர்.
பிளாட்பார்மில் நெரிசல் ஒருவர் ரயில் டிக்கெட் எடுத்து பயணிக்க பிளாட்பார்ம் வருகிறார் என்றால் அவரை வழியனுப்பி வைக்க மூன்று முதல் ஐந்து பேர் வரை வருகின்றனர். பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் என்பதால் பொருட்படுத்துவதில்லை. இதனால் பிளாட்பார்ம் நிரம்பி வழிகிறது. பல நேரங்களில் நெரிசல் கூட ஏற்பட்டு விடுகிறது.
சொந்த மாநிலம் செல்வோரின் கையில் அவரவர் குடும்பத்துக்கு தேவையான பொருள், பணம், துணிகளை கொடுத்து விடுகின்றனர். குடும்பத்துக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதால், பயணிப்போருக்கு தேவையான டிக்கெட்டை கவுன்டரில் எடுத்துக் கொடுப்பது, பிளாட்பார்ம் வந்து, குறிப்பிட்ட பெட்டியில் ரயில் ஏற்றி விடுவது, லக்கேஜ்களை பெட்டிக்குள் கொண்டு சேர்ப்பது என அனைத்தையும் ரயில் ஏற்றி விட வருபவர்களே பார்த்துக் கொள்கின்றனர்.
போலீஸ் தவிப்பு பிளாட்பார்மில் ஏற்கனவே உள்ள கூட்டம், மேலும் அதிகமாகிறது. லக்கேஜ்கள் அனைத்தையும் ஏற்றி விடுவதால், ரயிலின் பொதுப்பெட்டி சரக்கு ஏற்றும் பெட்டி போல் மாறி விடுகிறது.
ரயில் ஏறுபவரை விட வழியனுப்ப வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாவதால், ரயிலில் ஏற முற்படும் பிற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க முடியாமல், பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தவிக்கின்றனர்.

