/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு ஸ்டேஷன்; ஒரு ரயில்! மடத்துக்குளத்தில் மாறாத நிலை; போராட தயாராகி வரும் மக்கள்
/
ஒரு ஸ்டேஷன்; ஒரு ரயில்! மடத்துக்குளத்தில் மாறாத நிலை; போராட தயாராகி வரும் மக்கள்
ஒரு ஸ்டேஷன்; ஒரு ரயில்! மடத்துக்குளத்தில் மாறாத நிலை; போராட தயாராகி வரும் மக்கள்
ஒரு ஸ்டேஷன்; ஒரு ரயில்! மடத்துக்குளத்தில் மாறாத நிலை; போராட தயாராகி வரும் மக்கள்
ADDED : ஏப் 03, 2025 11:34 PM

மடத்துக்குளம் : வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில், ஒரு ரயில் மட்டுமே நின்று செல்லும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில் மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இப்பகுதியின் மக்கள் தொகை அதிகரிப்பு, தொழில் வளம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த, 2009ல் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது தாலுகா அலுவலகம், கோர்ட், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் மடத்துக்குளம் பகுதி உள்ளது. ஆனால், ரயில் சேவையில் மட்டும் இப்பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் - பாலக்காடு மீட்டர் கேஜ் பாதை அகல ரயில்பாதையாக மேம்படுத்தப்பட்ட போது, மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனுக்கும் புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதன் பின்னர் எவ்வித மேம்பாட்டு பணிகளும் இந்த ரயில்வே ஸ்டேஷனில் மேற்கொள்ளப்படவில்லை.
இதை விட, வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் ஒரு ரயில் மட்டுமே மடத்துக்குளத்தில் நிற்கிறது. தற்போது பாலக்காடு அகல ரயில்பாதையில், கோவை-மதுரை இன்டர்சிட்டி; பாலக்காடு-திருச்செந்துார், திருவனந்தபுரம்-மதுரை (அமிர்தா எக்ஸ்பிரஸ்), மேட்டுப்பாளையம்-துாத்துக்குடி(வாரம் இரு முறை) உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தொடரும் புறக்கணிப்பு
இதில், கோவை-மதுரை ரயில் மட்டுமே மடத்துக்குளம் ஸ்டேஷனில் நிற்கிறது. அனைத்து ரயில்களையும் நிறுத்த வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கை, பல ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இதே போல், கழிப்பிடம், குடிநீர் வசதியும் அங்கு இல்லை. புதர் மண்டி மக்கள் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. தற்போது தன்னார்வலர்களால், மரக்கன்றுகள் நடவு செய்ய புதர்கள் மட்டும் அகற்றப்பட்டுள்ளது.
மற்றபடி, ரயில்வே ஸ்டேஷனுக்குரிய எவ்வித தகுதியும் இல்லாமல் மடத்துக்குளம் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. அருகிலுள்ள மைவாடி ரோடு, ஸ்டேஷனில் டிக்கெட் கவுன்டர் செயல்பட்டு வருகிறது; ஆனால் மடத்துக்குளத்தில் இல்லை.
மடத்துக்குளத்தையொட்டி, திண்டுக்கல் - திருப்பூர் மாவட்ட எல்லையில், அதிகளவு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு தொழிலாளர்கள் செல்கின்றனர்.
அவர்கள், பழநி அல்லது உடுமலைக்கு சென்று ரயில் ஏற வேண்டிய நிலை உள்ளது. மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ரயில்வே பணியாளர் கூட இல்லாத நிலையில், இரவு நேரங்களில் ஸ்டேஷன் சமூக விரோத செயல்களின் மையமாக மாறி விடுகிறது.
ரயில் சேவை இல்லாமல் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவது குறித்து மடத்துக்குளம் பகுதி மக்கள், மக்கள் பிரதிநிதிகள் பல முறை மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் நேரடியாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
தாலுகா தலைமையிடமாக உள்ள மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தி, அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டேஷன் கட்டமைப்புகளை மேம்படுத்தி, அடிப்படை வசதிகளையும் கொண்டு வர வேண்டும்.
இது குறித்து, ரயில்வே நிர்வாகத்தினர் தொடர்ந்து அலட்சியம் காட்டினால், அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.