/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒன்றா, இரண்டா... பிரச்னைகள் ஏராளம்! குமுறும் குடியிருப்போர் நல அமைப்பு
/
ஒன்றா, இரண்டா... பிரச்னைகள் ஏராளம்! குமுறும் குடியிருப்போர் நல அமைப்பு
ஒன்றா, இரண்டா... பிரச்னைகள் ஏராளம்! குமுறும் குடியிருப்போர் நல அமைப்பு
ஒன்றா, இரண்டா... பிரச்னைகள் ஏராளம்! குமுறும் குடியிருப்போர் நல அமைப்பு
ADDED : ஜன 09, 2024 12:13 AM
உடுமலை நகராட்சி மற்றும் பெரியகோட்டை ஊராட்சி ஆகிய இரு பகுதிகளில், வி.ஜி.,ராவ் நகர், வி.ஜி.,ராவ் நகர் விரிவு, வேல் முருகன் நகர், கே.ஜி., நகர் மற்றும் யு.கே.சி., நகர் விரிவு என, 700க்கும் மேற்பட்ட வீடுகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
நகர எல்லையில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக, குடியிருப்புவாசிகள் 'குமுறி' வருகின்றனர்.
குடியிருப்புகளுக்கு செல்லும் நுழைவுவாயில் பாலம் முதல், குடிநீர், ரோடு, சாக்கடை, குப்பை, கழிவுகள் அகற்றாமல் சுகாதாரக்கேடு நிலவுகிறது. எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதிப்படுவதாக மக்கள் பிரச்னைகளை அடுக்குகின்றனர்.
வி.ஜி., ராவ் குடியிருப்போர் நல அமைப்பு தலைவர் ஹக்கீம், செயலாளர் தங்கமணி, பொருளாளர் மணி, அவைத்தலைவர் தங்கமணி ஆகியோர் கூறியதாவது:
குடியிருப்பு பகுதியில், கழுத்தறுத்தான் பள்ளம் உள்ளது. முறையாக துார்வாரப்படாமலும், சாக்கடை கழிவுகள் தேங்கியும், புதர் மண்டியும் காணப்படுகிறது.
குடியிருப்புக்கு நுழையும் வழித்தடமான வி.ஜி., ராவ் நகர் பாலம் கட்டப்பட்டு, 50 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், பாலம் வலுவிழந்து, பல இடங்களில் சிதிலமடைந்தும், ஓடு தளத்தில் ஓட்டைகள் விழுந்தும், எந்நேரமும் இடித்து விழும் அபாயத்தில் உள்ளது.
மேலும், பாலத்தின் இரு புறமும் தடுப்புச்சுவர்கள் இல்லாததால், மழை காலங்களில், சாக்கடை கழிவுகளுடன் கலந்து, வெள்ள நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இரவு நேரங்களில், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வருவோர், நிலை தடுமாறி ஓடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இந்த பாலத்தை அகற்றி, புதிதாக அகலமான பாலம் அமைக்க வேண்டும்.
ரோடுகளில், பார்த்தீனியம் உள்ளிட்ட செடிகள், முட் செடிகள், சீமைக்கருவேலன் மரங்கள் முளைத்தும் உள்ளன. இவற்றை அகற்றி துாய்மைப்படுத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளால், முறையாக குப்பை அகற்றப்படாமல் பல இடங்களில் மலைபோல் குவிந்துள்ளன. பிளாஸ்டிக் கழிவுகள், திடக்கழிவுகள் என ரோட்டோரங்களில் தேங்கியுள்ளதால், துர்நாற்றம், சுகாதாரக்கேடு நிலவுகிறது.
மழை நீர் வடிகால், சாக்கடை கால்வாய் துார்வாரப்படாததாலும், பல இடங்களில் முறையாக சாக்கடை கால்வாய் கட்டப்படாததால், கழிவு நீர் தேங்கி, துர்நாற்றம், கொசு உற்பத்தியாகிறது.
பெரும்பாலான ரோடுகள் பராமரிப்பின்றி, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மண் ரோடுகள், மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுகின்றன.
அதே போல், பாதாள சாக்கடை ஆள்இறங்கும் குழிகள் பல இடங்களில் மூடிகள் உடைந்தும், ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
நகர பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் உடைந்து, எந்நேரமும் விழும் அபாயத்தில் உள்ளன. டிரான்ஸ்பார்மர் பழுது காரணமாக, உயர் அழுத்த, தாழ்வழுத்த பிரச்னைகளால், மின் உபகரணங்கள் பாதிக்கின்றன.
தெரு விளக்குகள் அமைக்காமலும், இருக்கும் விளக்குகள் பராமரிப்பின்றியும் இருப்பதால் இரவு நேரங்களில் குடியிருப்பு ரோடுகள் இருட்டாக காணப்படுகிறது. இதனால், குற்றச்சம்பங்கள் அதிகரித்து வருகின்றன.
கே.ஜி., ராவ் நகர் பகுதியில் குப்பை முறையாக அகற்றப்பாடாமல், குப்பை கிடங்காக மாறி, துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதார கேடு ஏற்படுகிறது.கே.ஜி., நகர், வி.ஜி., ராவ் நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் இல்லாததால், கழிவு நீர் ரோடுகளிலேயே தேங்கி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
வி.ஜி., ராவ் நகர் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி, பழுதடைந்து, எந்நேரமும் விழும் அபாயத்தில் உள்ளது. தெரு நாய்களும் அதிகளவு சுற்றுகின்றன.
எனவே, புறக்கணிக்கப்பட்ட இப்பகுதியில், குப்பை முறையாக அகற்றவும், சாக்கடை, குடிநீர், ரோடு, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.