/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம் 4ம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி
/
பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம் 4ம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி
பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம் 4ம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி
பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம் 4ம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி
ADDED : அக் 19, 2025 09:12 PM
உடுமலை: பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்கு, மூன்று சுற்றுக்கள் இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்ட நிலையில், ஒரு வார இடைவெளியிட்டு, 4ம் சுற்றுக்கு நீர் திறக்கப்பட உள்ளது.
பி.ஏ.பி., 4ம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94,068 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த ஜூலை, 27ம் தேதி திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது.
வரும், டிச., 9ம் தேதி வரை, 135 நாட்களில், உரிய இடைவெளி விட்டு, 10,250 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பி.ஏ.பி., பாசன திட்டத்தில், மண்டல பாசன நிலங்களுக்கு, வழக்கமாக, 21 நாட்கள் நீர் திறப்பு, ஏழு நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில் நீர் வழங்கப்படும்.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை திருப்தியாக பெய்ததோடு, திட்ட தொகுப்பு அணைகளிலும் நீர்மட்டம் திருப்தியாக இருந்ததால், முதல் மூன்று சுற்றுக்களுக்கு இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, திருமூர்த்தி அணை நீர் மட்டம் குறைந்த நிலையில், மூன்றாம் சுற்றில் மீதம் உள்ள பகுதிகளுக்கு மட்டும் நீர் வழங்கப்படுகிறது. இதனால், அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
வரும், 23ம் தேதி, மூன்றாம் சுற்று பாசனம் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, நான்காம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி விடப்படுகிறது.
அதிகாரிகள் கூறுகையில், 'திருமூர்த்தி அணை நீர்மட்டம் குறைந்துள்ளதால், வரும், 23ம் தேதி வரை, மூன்றாம் சுற்றுக்கு நீர் வழங்கப்படுகிறது. பூசாரிபட்டி, திருப்பூர் பகுதியிலுள்ள நிலங்களுக்கு மட்டும் நீர் வழங்க வேண்டியுள்ளதால், இரு நாட்களாக அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நான்காம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி விட்டு, நீர் வழங்கப்படும்,' என்றனர்.