/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்ன வெங்காயம் விலை சரிவு: ஏற்றுமதி தடை எதிரொலி
/
சின்ன வெங்காயம் விலை சரிவு: ஏற்றுமதி தடை எதிரொலி
ADDED : மார் 03, 2024 08:41 PM

உடுமலை;உடுமலை பகுதிகளில், குறைந்த கால சாகுபடி, அதிக வருவாய் என்ற அடிப்படையில், சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வந்தனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடும் வறட்சி மற்றும் விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால், சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடுமலை பகுதிகளில், தற்போது சின்ன வெங்காயம் கிலோ, 20 ரூபாய் வரை விற்பனையாகிறது. விலையை எதிர்பார்த்தும், பயன்பாட்டிற்காக விதை இருப்பு வைத்திருந்த விவசாயிகளும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, விற்பனை செய்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது:
சின்ன வெங்காயம் சாகுபடிக்கு, விதை முதல் அறுவடை வரை ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. சாகுபடி காலம், 3 மாதம் என்பதால், அதிகளவு விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வந்தனர்.
இலங்கை, நேபாளம், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், கிலோ, 70 ரூபாய் வரை விற்றது. தற்போது, ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், விலை சரிந்து, 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால், தற்போது அறுவடை செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்தாண்டு பருவமழைகள் ஏமாற்றியதோடு, தற்போது வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால், அடுத்து விதைப்பு பணி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால், பட்டறைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் டன் சின்ன வெங்காயமும் தற்போது, விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால், விலை சரிவு ஏற்படுகிறது.
இவ்வாறு, தெரிவித்தனர்.

