/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொடிநாள் நிதி வழங்க ஆன்லைனில் வசதி
/
கொடிநாள் நிதி வழங்க ஆன்லைனில் வசதி
ADDED : அக் 30, 2024 09:02 PM
திருப்பூர்; முப்படைகளில் பணிபுரியும் படைவீரர்கள், ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக, ஆண்டுதோறும் டிசம்பர் 7 ம் தேதி, படை வீரர்நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்தநாளின் கொடிநாள் வசூல் தொடக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கொடி நாள் நிதி வசூலிக்கப்பட்டு, முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களின் குடும்ப நலனுக்காக வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில், அனைத்து அரசுத்துறை சார்பிலும், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்பட அனைத்துதரப்பினரிடமும், நேரடியாக பணமாக கொடிநாள் நிதி வசூலிக்கப்படுவது வழக்கம். தற்போது, கொடிநாள் நிதியை ஆன்லைனில் செலுத்தும் வசதியை தமிழக முன்னாள் படைவீரர் நலத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
flagday.tn.gov.in என்கிற இணையதளம் மூலம், கொடிநாள் நிதியை செலுத்தலாம். இந்த இணையதளத்தில், நிதி செலுத்துபவரின் பெயர், மொபைல் எண், இ-மெயில், முகவரி, குறிப்பிட்ட அரசு துறை அலுவலகம் மூலம் செலுத்தும்பட்சத்தில் அந்த அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக 'ரெபரல் கோடு' பதிவு செய்யவேண்டும்.
விரும்பும் தொகையை பதிவு செய்து, நெட்பேங்கிங் அல்லது யு.பி.ஐ., ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் செலுத்தலாம். செலுத்தும் தொகை நேரடியாக, முன்னாள் படைவீரர் நலத்துறையின் கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.
தொகை செலுத்திய மறுகணமே, செலுத்துபவரின் முழு விவரங்களுடன் கூடிய ரசீது வழங்கப்பட்டுவிடுகிறது.

