/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறிய குறைகள்தான்... விரைவில் சீர்படுத்துவோம்: அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மேம்படுத்த அதிகாரிகள் உறுதி
/
சிறிய குறைகள்தான்... விரைவில் சீர்படுத்துவோம்: அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மேம்படுத்த அதிகாரிகள் உறுதி
சிறிய குறைகள்தான்... விரைவில் சீர்படுத்துவோம்: அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மேம்படுத்த அதிகாரிகள் உறுதி
சிறிய குறைகள்தான்... விரைவில் சீர்படுத்துவோம்: அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மேம்படுத்த அதிகாரிகள் உறுதி
ADDED : அக் 25, 2025 01:09 AM

'அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், சிறிய குளம், குட்டைகள் நிரம்புவதில் சிக்கல் நீடிக்கிறது' என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 'அசாதாரண திட்டத்தை செம்மையாக செயல்படுத்தி வருகிறோம்; பராமரிப்புப்பணி முழுவீச்சில் நடந்து வருகிறது; அடுத்த சீசனுக்குள் அனைத்து குளம், குட்டைகளுக்கும் தடையின்றி நீர் செறிவூட்டல் பணி நடக்கும்' என, அத்திக்கடவு - அவிநாசி திட்ட அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர்வளத்துறையின் மேற்பார்வையில், 'எல் அண்ட் டி' நிறுவனத்தினர், 1,916 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளை செய்து முடித்து, தற்போது செயல்படுத்தி வருகின்றனர்.மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை ஆதாரமாக கொண்டு செயல்படும் இத்திட்டத்தில், பெரும்பாலான குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்பட்டு வருகிறது. தற்போது வட கிழக்குப்பருவ மழை பெய்து வரும் நிலையில், 'அத்திக்கடவு திட்டத்தின் கீழ் குளம், குட்டைகள் நிரம்பும்' என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இருப்பினும், சிறிய குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
திட்டச் செயல்பாடு முழு வெற்றி
பெருந்துறை வட்டம், அத்திக்கடவு - அவிநாசி திட்ட செயற்பொறியாளர் மோகனசுந்தரம் கூறியதாவது:குழாய் உடைப்பு, குளங்களில் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்கள் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் தான், வினியோகம் தடைபடுகிறது; பொதுமக்கள் சிலரே, இத்தகைய சேதங்களை ஏற்படுத்துவது தான் வருத்தமளிக்கிறது. மற்றபடி, திட்டம் முழு வெற்றி பெற்றிருக்கிறது. பல இடங்களில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்திருக்கிறது. 5 சதவீத விவசாயிகள் தான், சில குறைகளை தெரிவித்து வருகின்றனர். குன்னத்துார் குளத்தை சுற்றி, 8 கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது; விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்; திருப்தி தெரிவிக்கின்றனர். திட்டம் மிகப்பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் மஞ்சள், நெல் சாகுபடி செய்யும் நிலைக்கு விவசாயிகள் மாறியுள்ளனர். குறைகளை சரி செய்யும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு மோகனசுந்தரம் கூறினார்.
தொழில்நுட்ப, நிர்வாக சிக்கல்கள் களையப்படும்
அத்திக்கடவு - அவிநாசி திட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்புச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
கிட்டத்தட்ட, 1,000 கி.மீ., துாரத்துக்கு மேல் நிலத்தடியில் குழாய் பதித்து, நீர் வினியோகிப்பது என்பது, அசாத்தியமான திட்டம்; இதை, செவ்வனே செயல்படுத்தி வருகிறோம். இதுவரை, 1.05 டி.எம்.சி., அளவு நீர் எடுக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள, 1,045 குளம், குட்டைகளில், 1,000 குளங்களுக்கு நீர் செறிவூட்டப்படுகிறது. பிற துறைகளின் சார்பில் சாலை விரிவாக்கம், கேபிள் பதிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் போது குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது; அத்தகைய அடைப்புகளை சரி செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. திட்டத்தின் துவக்கத்தில், இதுபோன்ற சில இடர்பாடுகள் இருக்கத்தான் செய்யும்; அவை சரி செய்த பின், எந்தவொரு பிரச்னையும் இருக்காது.மோட்டார் பம்ப் இயக்க உதவும் மின் வினியோகத்தை பொறுத்தவரை, பெரும்பாலும் தென்னந்தோப்புக்குள் மின் கம்பிகள் செல்கின்றன. காற்று, மழையின் போது, தென்னை மட்டை மின் கம்பியின் மீது விழுந்தால் கூட, மின்சாரம் தடைபடுகிறது; இதுபோன்ற சிறிய இடர்பாடுகள் தான், நீர் செறிவூட்டல் பணியில் தாமதம் ஏற்பட காரணம். மின் பயன்பாடுக்கு சோலார் கட்டமைப்பு அமைப்பது தொடர்பாக, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்தாண்டு பருவமழை சீசனுக்குள், இதுபோன்ற தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியான சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விடும்.

