/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜூன் 2ல் திறப்பு: துாய்மையாகும் பள்ளிகள்!
/
ஜூன் 2ல் திறப்பு: துாய்மையாகும் பள்ளிகள்!
ADDED : மே 30, 2025 01:11 AM

திருப்பூ; வரும், 2ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வளாகம், வகுப்பறை, மைதானத்தை துாய்மைப்படுத்தும் பணிகள் நேற்று துவங்கியது. நாளையும் (31ம் தேதி) இப்பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி திறப்பு தாமதமாகுமென பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைத்த பள்ளிகல்வித்துறை இயக்குனரகம், 'பள்ளி திறப்பில் மாற்றமில்லை; புதிய கல்வியாண்டு (2025 - 2026) ஜூன், 2ல் துவங்கும்,' என அறிவித்தது; தொடர்ந்து, பள்ளிகள் திறக்கும் முன் உரிய பணிகளை மேற்கொள்ள வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டது.
அதில், 'குடிநீர் தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கிருமி நாசினி கொண்டு துாய்மைப் படுத்தி, புதிதாக தண்ணீர் விட்டு, தண்ணீருக்கான வசதி பள்ளியில் பரிசோதிக்க வேண்டும். பள்ளி வளாகம், ஆய்வகம், கழிப்பறை, அனைத்து வகுப்பறை, ஆசிரியர், தலைமை ஆசிரியர் அறை, சமையலறைகளை துாய்மைப்படுத்த வேண்டும். பள்ளி கட்டடம் மேல் மழைநீர், குப்பை இருந்தால், அகற்றி, மழைநீர் வடிகால் கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும். கற்றல், கற்பித்தல் உபகரணங்களை துாய்மைபடுத்தியிருக்க வேண்டும். மின்பயன்பாட்டு உபகரண செயல்பாடு சரிவர உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,' என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல் விரிவாக தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி வளாகம், வகுப்பறை துாய்மை பணிகள் நேற்று துவங்கியது. மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி ஊழியர்கள் உதவியுடன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் குழுக்கள் பள்ளி திறப்புக்கான துாய்மை பணியை துவங்கினர்.
வரும், 31ம் தேதிக்குள் பள்ளிகள் துாய்மை செய்திருப்பதை தலைமை ஆசிரியர் உறுதி செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலருக்கு அறிக்கை விபரம் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.