/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாய சங்கப் பிரதிநிதிகள் கருத்து
/
விவசாய சங்கப் பிரதிநிதிகள் கருத்து
ADDED : பிப் 02, 2025 01:15 AM

திருப்பூர்: மத்திய பட்ஜெட் குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது:
பொருளாதாரம் முன்னேறாது
ஈஸ்வரன், மாநில ஊடகப்பிரிவு செயலாளர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்:
மத்திய அரசு ஏற்கனவே உறுதி அளித்த விளை பொருட்களுக்கான ஆதார விலை இன்று வரை நிறைவேற்றப்படாதது பெரிய ஏமாற்றமே. விவசாய தொழில் சார்ந்த உரம், தீவனம் ஆகியவற்றுக்கான மானிய திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு வருவதை வரவேற்கிறோம். அதேசமயம், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத வரை விவசாயிகளின் பொருளாதாரம் முன்னேறாது. விவசாயிகள் வளர்ந்தால்தான் நாடு முன்னேறும். எனவே, விவசாயிகளை பொறுத்தவரை, இது, ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்.
விவசாயிகளுக்கு பலன்
சுப்ரமணியம், களஞ்சியம் விவசாயிகள் சங்கம்:
'கிஷான் கிரெடிட்' கார்டு உச்சவரம்பு, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது. விவசாய கூலி உயர்வு, விவசாய உபகரணங்கள் விலை அதிகரிப்பு போன்ற சூழலில், விவசாயிகளுக்கு பலன் தரும். பருப்பு உற்பத்தியில், 6 ஆண்டுக்குள் தன்னிறைவு என்ற இலக்கு வைத்துள்ளனர். இதனால், இறக்குமதி குறையும். உள்நாட்டு விவசாய உற்பத்தி அதிகரிக்கும். விவசாய தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
அறிவிப்பு இல்லை
சண்முகசுந்தரம், மாநிலத் துணைத் தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்:
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. தென் மாநில நதிகள் இணைப்பு திட்டம் சம்பந்தமாக அறிவிப்பு இல்லை. அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் அமல்படுத்துவது போல விவசாயிகளுக்கு எம்.எஸ்., சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தோம். அதற்கான அறிவிப்பு இல்லை.
நிறைவேறாத எதிர்பார்ப்பு
ஈசன் முருகசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர்:
வேளாண்துறைக்கு, 2020--21ல், 5.2 சதவீதமாக இருந்த நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு, 3.4 சதவீதமாக உள்ளது. வேளாண் விளை பொருட்களை உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த திட்டங்களும் இல்லை. விவசாய விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன், 50 சதவீதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்ய அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். அது குறித்து ஒன்றுமில்லை.