/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு
/
சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு
ADDED : ஜன 30, 2024 12:00 AM

திருப்பூர்;நொய்யலில் கலக்கும் சாக்கடை கழிவுநீரை சுத்திகரித்து, ஆற்றில் விடும்வகையில், நொய்யல் ஆற்றை ஒட்டி ஆறு இடங்களில் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
மக்களின் எதிர்ப்பு காரணமாக, பூலவாரி சுகுமார் நகரில் அமைக்கப்பட இருந்த சுத்திகரிப்பு மையம், வி.ஜி.வி., கார்டன் அருகே காஞ்சி நகருக்கு இட மாறுதல் செய்யப்பட்டுள்ளது. பணிகள் துவங்கிய நிலையில், மையம் அமைக்க, காஞ்சி நகர் பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், அப்பகுதியினர் அளித்த மனு குறித்து, கூறியதாவது:
திருப்பூர், காஞ்சி நகரில், வீடுகள் நிறைந்த பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. சுத்திகரிப்பு மையம் அமைந்தால், காற்று மாசு ஏற்படும்; நோய் தொற்று அதிகரிக்கும். நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, வேறிடம் தேர்வு செய்யப்பட்டு, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளது. தற்போது எங்கள் பகுதியில் அமைக்க உள்ளனர். மையம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மக்களிடம் ஏராளமான கேள்விகள் உள்ளன.
அவற்றுக்கு, அதிகாரிகள் உரிய பதிலளிக்கவில்லை. பணிகளை துவக்கிய பின்னரே, எங்களுக்கு தெரிந்தது. வீடுகள் இல்லாத, வேறு இடத்தை தேர்வு செய்து சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.