/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் ஊழியர் பாதுகாப்பு உறுதி செய்ய உத்தரவு
/
பெண் ஊழியர் பாதுகாப்பு உறுதி செய்ய உத்தரவு
ADDED : டிச 09, 2024 07:30 AM
திருப்பூர் : 'ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவசர காலங்களில், போலீஸ் உதவியை நாடுவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்,' என, பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் தரப்பில் இருந்து அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் எந்த செயலில் ஈடுபடக்கூடாது என குறிப்பிட்டு, சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், ''ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
அவசர காலங்களில், போலீஸ் உதவியை நாடுவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும். நோயாளிகள் அவர் உடன் இருப்பவர்கள் அல்லாமல், வெளிநபர்கள் மருத்துவமனைக்குள் நுழைவதை முறைப்படுத்த வேண்டும். பகல் மற்றும் இரவு காவலர் பணியில் இருப்பதை, பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்ய வேண்டும்.
அவசர நிலையை தவிர, மற்ற நேரங்களில், அலுவலகம் நேரம் கடந்தோ, விடுமுறை நாட்களிலோ கூட்டம் நடத்தக்கூடாது. துணை சுகாதார நிலையங்களை பொறுத்த வரை குடியிருப்பு பகுதிக்கான மின்கட்டணத்தை மட்டும் சம்பந்தப்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் செலுத்தினால் போதும். நிலைய கட்டடங்களுக்கான மின்கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.
தேசிய நலவாழ்வு திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அரசின் சிறப்பு திட்டங்களை சரி வர செயல்படுத்த வேண்டும். பொது சுகாதாரத்துறையின் கீழ் பணியாற்றும் அனைவரும் முகப்பதிவு அடிப்படையில் வருகைப்பதிவு செய்ய வேண்டும்.
பணியாற்றும் இடத்தில், நிதி குறித்த விவகாரத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்; அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் எந்த செயலில் ஈடுபடக்கூடாது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.