/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை தொட்டி
/
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை தொட்டி
ADDED : டிச 06, 2025 05:30 AM

உடுமலை: இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலைத்தொட்டியை பராமரிக்க, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், புதுப்பாளையம் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம், புதுப்பாளையம் கிராமத்துக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதற்காக, ஊராட்சி அலுவலகம் அருகே, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, பராமரிப்பு இல்லாமல், இடிந்து விழும் நிலையில் அச்சுறுத்தி வருகிறது.
தொட்டியின் துாண்களில் விரிசல் விழுந்து, கான்கிரீட் பூச்சு உதிர்ந்து வருகிறது. மேற்பகுதியிலும் பல இடங்களிலும் விரிசல் விட்டுள்ளது. படிப்படியாக வலுவிழந்து மேல்நிலைத் தொட்டி கீழே விழும் அபாயத்தில் உள்ளது.
இத்தொட்டியின் அருகில், கிராம குடிநீர் குழாய், கால்நடை கிளை நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியிலுள்ள மேல்நிலைத்தொட்டியை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் பல முறை வலியுறுத்தியும், ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

