/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி ஆயக்கட்டில் நெற்பயிர் சேதம்; தொடர் மழையால் பாதிப்பு
/
அமராவதி ஆயக்கட்டில் நெற்பயிர் சேதம்; தொடர் மழையால் பாதிப்பு
அமராவதி ஆயக்கட்டில் நெற்பயிர் சேதம்; தொடர் மழையால் பாதிப்பு
அமராவதி ஆயக்கட்டில் நெற்பயிர் சேதம்; தொடர் மழையால் பாதிப்பு
ADDED : நவ 15, 2024 09:42 PM

உடுமலை; அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில், தொடர் மழை பெய்து வருவதால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், வயல்களிலேயே விழுந்து சேதமடைந்துள்ளது.
உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணை வாயிலாக, பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிப்புத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார் ஆகிய ராஜவாய்க்கால் பாசனத்திற்கு, கடந்த, ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனையடுத்து, இப்பகுதிகளில், சுமார், 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
இப்பகுதிகளில், தற்போது நெல் அறுவடை துவங்கி தீவிரமடைந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் அறுவடை செய்வதற்கு முன், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்யும் நிலையில், நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
வயல்களில் மழை நீர் தேங்கியும், கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில், நெற்கதிர்கள் தலைசாய்ந்து, நிலத்தில் விழுந்துள்ளது. நெல் மணிகள் சிதறி, பெருமளவு வீணாகியுள்ளதோடு, மீண்டும் வயல்களில் முளைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்வதால், அறுவடை செய்ய முடியாமல், குமரலிங்கம், கண்ணாடிப்புத்துார், சோழமாதேவி, கல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டு குறுவை நெல் சாகுபடி விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
குறுவை நெல் சாகுபடியில், அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தற்போது வட கிழக்கு பருவமழையும் தீவிர மடைந்துள்ளது.
மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதிகளில், தொடர்ந்து கனமழை பெய்கிறது. மழைக்கு தாங்காமல், நெற்பயிர்கள் தலைசாய்ந்து, நிலத்தில் விழுந்துள்ளது. நெல் கதிர்கள், மணிகள் வயல்களில் விழுந்து மீண்டும் முளைக்கும்நிலையில், நெல் மகசூல் பெரிதும் பாதித்துள்ளது.
தற்போது, நெல் அறுவடைக்கு விவசாய தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில், முழுவதும் அறுவடை இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. தொடர்ந்து மழையால், வயல்களில் நீர் தேங்கி, அறுவடை இயந்திரம் உள்ளே இறக்க முடியாத நிலை உள்ளது. அறுவடை செய்த நெல்லும், உலர வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பருவமழைக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.