/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழநி - திருப்பதி பஸ் மீண்டும் இயக்கம்
/
பழநி - திருப்பதி பஸ் மீண்டும் இயக்கம்
ADDED : ஏப் 12, 2025 11:16 PM

திருப்பூர்: ஆன்மிக தலங்களை இணைக்கும் நோக்கில் ஆந்திர மாநிலம், திருமலையில் (திருப்பதியில்) இருந்து, தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், பழநிக்கு ஆந்திர போக்குவரத்து கழகம் (ஏ.பி.எஸ்.ஆர்.டி.,) சார்பில் பஸ் இயக்கப்பட்டு வந்தது. பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த பஸ் இயக்கம், பல்வேறு காரணங்களால், 2022 துவக்கத்தில் நிறுத்தப்பட்டது.
பழநி மற்றும் தாராபுரத்தில் இருந்து திருப்பதி பயணித்து வந்த பலர் ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார் சென்று அங்கிருந்து திருப்பதிக்கு வேறு ஒரு பஸ்சில் பயணித்து வந்தனர். திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் முன்பதிவு அதிகரிப்பதால், கோடை விடுமுறை கூட்டத்தை ஈர்க்க இரண்டரை ஆண்டுகளுக்கு பின் மீண்டும், பழநி - திருப்பதி பஸ் இயக்கம் கடந்த வாரம் அம்மாநில போக்குவரத்து கழகத்தால், துவங்கப்பட்டுள்ளது.
இரவு, 9:00 மணிக்கு பழநியில் புறப்படும் பஸ் தாராபுரம், ஈரோடு, பவானி, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சித்துார் வழியாக மறுநாள் காலை 8:00 மணிக்கு திருமலை திருப்பதி சென்றடைகிறது. பயணி ஒருவருக்கு, கட்டணம், 682 ரூபாய். மறுமார்க்கமாக இதே போல், திருப்பதியில் இரவு, 9:00 மணிக்கு புறப்படும் பஸ் மறுநாள் காலை, 7:00 மணிக்கு பழநி வந்தடைகிறது.
எஸ்.இ.டி.சி.,பஸ் இயக்கப்படுமா?
நம் மாநில எஸ்.இ.டி.சி., (விரைவு போக்குவரத்து கழகம்) மூலம் பழநியில் இருந்து திருப்பதிக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதன் மூலம், போக்குவரத்து கழகம் வருவாயையும் ஈட்ட முடியும்.

